ஆஸ்கார் விருது அமைப்பின் நூலகத்தில் இடம்பெறும் ‘பார்க்கிங்’ திரைக்கதை

ஆஸ்கார் விருது அமைப்பின் நூலகத்தில் இடம்பெறும் ‘பார்க்கிங்’ திரைக்கதை

1 mins read
228c153d-6acd-420b-bac9-8bb2a2366a7c
‘பார்க்கிங்’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

அண்மையில் வெளியீடு கண்ட ‘பார்க்கிங்’ திரைப்படம் ஆஸ்கர் விருது அமைப்பின் நூலகத்தில் வைக்கப்பட உள்ளது.

ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரே வளாகத்தில் வசிக்கும் இரு குடும்பத் தலைவர்கள் இடையே தங்களுடைய கார்களை எங்கு நிறுத்துவது என்பது தொடர்பாக மோதல் வெடிக்கிறது. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை. இப்படத்தின் திரைக்கதை அமைப்பு சிறப்பாக இருப்பதாகப் பலரும் கூறினர்.

இந்நிலையில், இந்தத் திரைக்கதையை ஆஸ்கார் விருது அமைப்பு தனது நூலகத்தில் வைக்க விரும்புவதாக படத்தின் தயாரிப்பாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

மிகச்சிறந்த படைப்புகளுக்கு மத்தியில் தனது படைப்பும் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வசூல் ரீதியிலும் இப்படம் சாதித்துக் காட்டியுள்ளளது. மொத்தம் ரூ.6 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 17 கோடி ரூபாய் வசூல் செய்ததாக விநியோகிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்கார் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது உற்சாகம் அளிப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

“பார்க்கிங் படம் உங்கள் இதயங்களிலிருந்து ஆஸ்கார் நூலகம் வரை சென்றுள்ளது. ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடிப் போகும்.

“இந்த நம்பமுடியாத பயணத்திற்கும் என் பார்க்கிங் அணிக்கும் நன்றி,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ஹரீஷ் கல்யாண்.

‘பார்க்கிங்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்