இந்த அனுபவம் எளிதில் கிடைத்துவிடாது: அனிகா

இந்த அனுபவம் எளிதில் கிடைத்துவிடாது: அனிகா

3 mins read
baf09d0b-9465-4b6d-9df3-d4c1e4a16866
அனிகா. - படம்: ஊடகம்

தமிழில் இப்போதுதான் தமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப சில கதாபாத்திரங்கள் அமைந்து வருவதாகச் சொல்கிறார் அனிகா.

தற்போது ஹிப் ஹாப் ஆதியுடன் ‘பி.டி.சார்’ படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்து இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிகிறது.

“அனுபவம் வாய்ந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைத்துவிடாது. அந்த வகையில் இந்தப் படத்தில் எனது தந்தையாக இளவரசு, தாயாக வினோதினி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மேலும் பல மூத்த, இளம் கலைஞர்களும் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர்.

“அவர்களுடைய கடந்தகால அனுபவங்கள் அனைத்துமே நமக்கான நல்ல பாடங்கள் என்பதை என்னால் உணர முடிந்தது,” என்கிறார் அனிகா.

ஆதியைப் பொறுத்தவரை மிக எளிமையான மனிதர் என்றும் இளம் வயதிலேயே பல சாதனைகளைப் புரிந்தவர் என்றாலும் எந்தவிதமான தலைக்கனமும் இல்லாதவர் என்றும் பாராட்டுகிறார்.

“ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், அதற்காக என்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வேன். அப்போதுதான் படப்பிடிப்பின்போது நமது திறமையை நூறு விழுக்காடு வெளிப்படுத்த முடியும்.

படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாள்களில் தனது தோழிகளை சந்திப்பதாகக் கூறுபவர், நடிகை காஷ்மீரா பர்தேசி, தனது நெருங்கிய தோழியாகவிட்டதாகச் சொல்கிறார்.

“பி.டி.சார்’ படத்தில் நடித்த பிறகு, காஷ்மீரா நெருக்கமாகிவிட்டார். அவர் பழகுவதற்கு மிக இனிமையானவர். அவரும் நானும் இணைந்துவிட்டால் போதும், படப்பிடிப்பு நடக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். கடினமான காட்சிகளில், முக்கியமான வசனங்களைப் பேசி முடித்த பிறகு இயல்பாகவே உடலும் உள்ளமும் களைத்துப் போய்விடும்.

“அப்படிப்பட்ட தருணங்களின்போது படப்பிடிப்பு முடிந்த பிறகு எத்தகைய உணவை சாப்பிடலாம், எந்த உணவு வகை உற்சாகம் அளிக்கும் என்பதை நன்கு அறிந்தவர் காஷ்மீரா. அவரது உதவியால் பல சுவையான உணவுகளை என்னால் சாப்பிட முடிந்தது,” என்று சொல்லும் அனிகா, ‘பி.டி.சார்’ படம் தந்த அனுபவங்களை வாழ்நாளில் மறக்க இயலாது என்கிறார்.

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அதிகம் மெனக்கெட வேண்டியிருந்ததாக அனிகா சொல்கிறார். பொதுவாக, அச்சமயம் சென்னையில் குளிர் நிலவும். இந்நிலையில், மொட்டை மாடியில் நடக்கும் சில காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.

“அது மட்டுமல்ல, மழை பெய்யும்போது அந்தக் காட்சியை எடுக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இதற்காக செயற்கை மழையை உருவாக்கி, காட்சி எடுக்கப்பட்டது.

“ஏற்கெனவே குளிர் நிலவும் வேளையில், செயற்கை மழையும் சேர்ந்து கொண்டதால் குளிர் தாங்க முடியவில்லை. ஒரு வசனத்தைப் படமாக்கிய பிறகு கேரவேனில் ஏறி சற்று ஓய்வெடுக்கலாம் என்றால், அதுவும் சாத்தியப்படவில்லை.

“மாடியில் இருந்து கீழே இறங்கிச் சென்று மீண்டும் மாடி ஏற வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த சிறுசிறு இடைவேளைகளின்போது நானும் காஷ்மீராவும் சூடாகத் தேநீர் அருந்தி குளிரில் தாக்குப்பிடித்தோம். இந்த அனுபவத்தையும் மறக்கவே இயலாது,” என்கிறார் அனிகா.

‘பி.டி.சார்’ படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி பகுதிக்கு முதன்முறையாகச் சென்றிருந்தாராம். அங்குள்ள ரம்மியமான சூழல் வெகுவாக் கவர்ந்துவிட்டதாம்.

“எனினும், படப்பிடிப்பு முடிவடைந்த மறுநாளே அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அந்தப் பகுதியைச் சுற்றிப்பார்க்க நேரமின்றிப் போய்விட்டது.

“அடுத்த முறை பொள்ளாச்சியில் படப்பிடிப்பு என்றால், ஒருநாள் முன்னதாகவே கிளம்பிச் சென்றுவிடுவேன். அதுதான் என் திட்டம்.

“உள்நாட்டில் உள்ள அழகான இடங்களைப் பார்க்க வெளிநாடுகளில் சுற்றித் திரிவது தேவையற்றது என்பேன்,” என்கிறார் அனிகா.

குறிப்புச் சொற்கள்