மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகிறது ‘பிள்ளையார் சுழி’ படம்.
சிலம்பரசி தயாரித்துள்ள இப்படம், ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரசியமான கதை என்கிறார் இயக்குநர் மனோகரன் பெரியதம்பி.
தீராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது ஜோடியாக அபிநயா நடித்துள்ளார்.
அண்மையில் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்க, ‘பிள்ளையார் சுழி’ இறுதிச்சுற்றுக்குத் தேர்வானது.
“மாற்றுத்திறனாளி குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசுகிறது இப்படம். வருங்கால தலைமையினரான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை நம்மில் ஒருவராகக் கருதி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்,” என்கிறார் இயக்குநர் மனோகரன் பெரியதம்பி.
படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைக்கும் படம் இது என்றும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
“இப்படத்தின் நாயகன் தீராஜ், ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘டபுள் டக்கர்’ உள்ளிட்ட படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளார். அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஆர்ஜே மகாலட்சுமி ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அருமையாக நடித்துள்ளனர்,” என்கிறார் இயக்குநர் மனோகரன் பெரியதம்பி.

