திறமையான, முதன்மையான மனிதனின் கதை ‘ஏஸ்’

3 mins read
86933173-9ed4-479e-ae30-0acbd2fea6c3
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி இயக்குநரின் நடிகர். கதைக்கு என்ன தேவையோ, அதற்கான உழைப்பைக் கொடுக்கத் தயங்காதவர்,” என்று பாராட்டுகிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆறுமுக குமார்.

இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் ‘ஏஸ்’.

முழுக் கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒட்டுமொத்த படத்தையும் அங்குதான் படமாக்கி உள்ளனர்.

“விஜய் சேதுபதி ஒரு படத்துக்காக எவ்வளவு மெனக்கெடுவார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

“இதற்கு முன்பு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்தபோதே அவரை எனக்குத் தெரியும். அவரது நட்பு வட்டத்தில் எனக்கும் இடம் இருந்தது.

“அந்தச் சமயத்தில் எப்படி பேசிப் பழகினாரோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். அதே அன்பு, அதே எளிமை என எதுவும் மாறாமல் இன்னமும் இயல்பாகப் பழகுகிறார்,” என்று விகடன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார்.

அண்மையில் வெளியீடு கண்ட ‘ஏஸ்’ படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது குண்டர் கும்பல்கள் தொடர்பான கதையாக இருக்கும் என்று சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இயக்குநரோ இதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.

இந்தக் கதையில் பல்வேறு வணிக அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் காதல், எதிர்மறை நகைச்சுவை ஆகியவற்றுடன் ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தை உணர முடியும் என்றும் சொல்கிறார் ஆறுமுக குமார்.

தொடர்புடைய செய்திகள்

“‘ஏஸ்’ என்பது சீட்டாட்டத்தில் முதல் சீட்டைக் குறிக்கும். அந்தச் சீட்டுதான் ஆட்டத்தின் போக்கையே வடிவமைக்கும் என்பார்கள்.

“அதே சமயம் ஏஸ் என்பதற்கு மேலும் ஓர் அர்த்தம் உள்ளது. திறமையான, முதன்மையான மனிதரையும் ‘ஏஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.

“இந்தக் கதைக்கு இந்த வார்த்தை பொருத்தமாக இருக்கவே, அதையே தலைப்பாக வைத்தோம்.

“இதற்கு முன் விஜய் சேதுபதியை வைத்துத் தயாரித்த ‘லாபம்’ படத்துக்கு முன்பே ‘ஏஸ்’ கதையை படமாக்கும் திட்டம் இருந்தது.

அந்தச் சமயத்தில் அவரிடம் மூன்று கதைகள் சொல்லியிருந்தேன். அதில் ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதான் ‘ஏஸ்’.

“பிறகு ‘லாபம்’ படத்தை முடித்த பின்னர், ‘ஏஸ்’ கதையை விரிவாக்கி, மெருகேற்றும் வேலை நடந்தது.

“இந்தப் பிரபஞ்சம் ஒரு புரியாத புதிர். அதன் விளையாட்டுக்கு திறமையான ஒருவனைத் தேர்ந்தெடுத்து தன் விளையாட்டை தொடங்குகிறது.

“அந்த ஆட்டத்தில் விஜய் சேதுபதி ஏன் வந்தார் என்பதெல்லாம் படத்தைப் பார்க்கும்போது புரியும். இப்போதே விவரித்தால் சுவாரசியம் குறைந்துவிடும்,” என்கிறார் ஆறுமுகக்குமார்.

இப்படம் முழுவதும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். அவர் யார், அசாத்தியமான விஷயங்களை எல்லாம் இவரால் எளிதில் செய்ய முடிகிறதே... எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார் எனப் பல்வேறு கேள்விகள் நமக்குள் எழும்.

“திடீரென சூதாட்டம் ஆடுவார். வேறு இடத்தில் பணம் திருடுவார். இப்படிப் புரியாத புதிராக இருப்பார்.

“விஜய் சேதுபதியின் ஜோடியாக ருக்மணி வசந்த் அறிமுகமாகிறார். அவருக்கும் சேதுபதிக்கும் இடையேயான உடல்மொழி அருமையாக அமைந்துள்ளது.

“யோகிபாபு, படம் முழுவதும் வருவார். வழக்கம்போல் கவலை மறந்து சிரிக்க வைப்பார்.

“இப்படத்தில் இரண்டு வில்லன்கள். ஒருவர் பப்லு (பிருத்விராஜ்). அண்மையில் வெளியான ‘அனிமல்’ படத்திலும் முத்திரை பதித்தவர்.

“மற்றொரு வில்லனாக ‘கேஜிஎஃப்’ பட வில்லனான அவினாஷ் நடித்துள்ளார்.

“தற்போது சிவகார்த்திகேயனுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார் ருக்மணி. கதைப்படி இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண். அங்கு அவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்தச் சமயத்தில் கதாநாயகன் அவருக்கு அறிமுகமாகிறார்.

“அதன் பிறகு இறுதிக்காட்சி வரை படம் விறுவிறுவென நகரும்,” என்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.

குறிப்புச் சொற்கள்