விவாகரத்து செய்தியறிந்து நானும் என் கணவரும் சிரித்துக்கொண்டோம்: நமீதா

2 mins read
ff39fbe8-86c6-4a23-a4db-6f15043a083d
நமீதா தன் கணவருடன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அண்மையில் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார். இதேபோல், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை நமீதாவும் தனது கணவர் வீரேந்திர செளத்ரியை விவாகரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் காட்டுத் தீபோல் சமூக ஊடகங்களில் பரவியது.

இதற்கு உடனடியாக விளக்கமளித்து, வதந்தி மேலும் பரவாமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நமீதா.

“எங்களைப் பற்றி இப்படி ஒரு வதந்தியைப் பரப்ப எப்படி மனசு வருகிறது? ஒரு சில நாள்களுக்கு முன்புதான் என் கணவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துகொண்டேன்.

“இந்தச் சூழலில், எந்த அடிப்படையில், எதை வைத்து நாங்கள் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல்களைப் பரப்புகின்றனர் என்பதே தெரியவில்லை.

“எனினும், சினிமாவில் நடிகையான பின்னர் இதுபோன்ற பல வதந்திகளைப் பார்த்துவிட்டதால், நானும் என் கணவரும் இதுபற்றிக் கவலைப்படவில்லை. மாறாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்,” என்று நமீதா கூறியுள்ளார்.

விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கோலிவுட்டின் கனவுக் கன்னியாக சில காலங்களுக்கு வலம் வந்தார்.

பொதுவாக ரசிகர்கள் எல்லாரையும் ‘மச்சான்ஸ்’ என்று அழைப்பது தான் நமீதாவின் வழக்கம். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இப்போதும் உள்ளது.

குறுகிய காலத்தில் உச்ச நடிகையாக உயர்ந்த நமீதா, ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் திரைப்பட வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2017ல் வீரேந்திர செளத்ரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அரசியலில் சேர்ந்து பாஜக கட்சியில் பணியாற்றி வருகிறார் நமீதா. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சிக்காக இவர் பிரசாரம் செய்தார்.

குறிப்புச் சொற்கள்