விண்வெளி ஆய்வாளராக உருவாக வேண்டும் என்பதுதான் தனது ஆசையாக இருந்தது என்றும் காலம் தம்மை திரைப்பட நடிகையாக உருவாக்கியது என்றும் சொல்கிறார் ‘ரசவாதி’ படத்தின் கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ்.
இவர் பிறந்தது கேரள மாநிலத்தில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழகத்தில்தானாம். அதனால் மலையாளத்தைவிட தமிழில் நன்றாகப் பேசுகிறார்.
தந்தை வெங்கடேஷ் சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்றும் தனது சிறு வயதிலேயே அவர் காலமாகிவிட்டார் என்றும் சொல்கிறார் ரேஷ்மா.
இவரது தாயார் ரமா ஆசிரியையாகப் பணியாற்றியவர். தற்போது சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
“ஒரே மகள் என்பதால் பாசத்தைக் கொட்டி வளர்த்தார் என் அம்மா. வணிகத் துறையில் பட்டப்படிப்பை முடித்த கையோடு, வங்கித்தேர்வு, கணக்காய்வாளர் பணிக்கான தேர்வு என பலவற்றுக்கும் நிறைய படித்திருக்கிறேன்.
“ஆனால், இவற்றைக் கடந்த பின்பு திடீரென சினிமா ஆசை மனதில் எட்டிப்பார்த்தது. சினிமா என்றதும் அம்மாவுக்கு மிகுந்த அதிர்ச்சி. மனதில் கவலையும் சேர்ந்துகொண்டது. எனினும், அவரை ஒருவழியாகச் சமாதானப்படுத்திய பிறகு நடிகையாகிவிட்டேன்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் ரேஷ்மா.
படத்தின் தலைப்பில் இவரது பெயரைப் பார்த்தபோது மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாராம் தாயார். அந்த நொடியில் தன்னைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தது தனது தாயார்தான் என்கிறார்.
“படத்தின் சுவரொட்டி, தலைப்பு என அனைத்திலும் என் பெயரையும் படத்தையும் பார்த்து அம்மா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அதைப் பார்த்தபோது அவர் எனக்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மனதில் நிழலாடியது.
தொடர்புடைய செய்திகள்
“நான் விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற ஆசைக்கு காரணம் மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாதான். அவரைப் பற்றி என் பள்ளிப் புத்தகத்தில் தனிப்பாடமே இடம்பெற்றிருந்தது. அதை படித்த பிறகுதான் விண்வெளி குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.
“விண்வெளி ஆராய்ச்சியாளராக விண்ணுக்குப் பறக்க வேண்டும், அங்கு அனைத்தையும் பார்த்து எனது ஆராய்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன்.
“இதுவே என் வாழ்வின் ஆசையாக இருந்தது. ஆனால், இப்போது சினிமா, நடிகை என்பதுதான் என்னுடைய கனவு. காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது,” என்கிறார் ரேஷ்மா.
எனினும் எடுத்த எடுப்பிலேயே, திரையுலகில் இவரது கனவு நனவாகிவிடவில்லை. ‘சாலா’ என்ற தெலுங்குப் படத்தில்தான் அறிமுகமானாராம்.
தொடக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார். பிறகு சில ‘யூடியூப் சேனல்’ நிகழ்ச்சிகளிலும் ரேஷ்மாவைப் பார்க்க முடிந்தது.
“அதன் பிறகுதான் சினிமா வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கின. முதலில் ‘சாலா’, பிறகு ‘ரசவாதி’ என எனது திரைப்பயணம் தொடங்கியது.
“ரசவாதி’ படத்தில் அர்ஜுன் தாஸ், சரத்குமார் என அனுபவ நடிகர்களுடன் நடித்துள்ளேன். சரத்குமார் தன்னுடன் நடிக்கும் யாரையும் கட்டுப்படுத்த மாட்டார். சுதந்திரமாக நடிக்க அனுமதிப்பார். என்னை புதுமுகம்போல் கருதாமல் உற்சாகப்படுத்தினார்.
“அதேபோல் அர்ஜுன் தாசும் ஒரு நல்ல நண்பரைப் போல் பழகினார்,” என்கிறார் ரேஷ்மா.
‘ரசவாதி’ படத்தில் நடிக்க எந்தவிதப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் சிறப்பாக நடனமாடியதாக கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் நடனப் பயிற்சியாளர் சதீஷ் மாஸ்டரைத்தான் சென்றடைய வேண்டும் என்றும் சொல்கிறார்.
“இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும்தான் செய்தேன். கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப நடிக்க வேண்டும் என்பதற்காக சற்று மெனக்கெட்டேனே தவிர, சிறப்புப் பயிற்சி ஏதும் பெறவில்லை.
“மொழி தெரியும் என்பதால் சிரமம் இன்றி நடிக்க முடிந்தது. வசனங்களை, காட்சிகளின் தன்மையை உணர்ந்து செயல்பட முடிந்தது, என்று சொல்லும் ரேஷ்மா, அடுத்து ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு படத்தில் சிறு கதாபாத்திரத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதை தமது இலக்காகக் கொண்டுள்ளார்.

