‘கருடன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக தம்மை நிலைப்படுத்திக்கொண்டுள்ளார் நடிகர் சூரி.
‘விடுதலை’ படத்துக்குப் பிறகு அவர் கதை நாயகனாக நடித்துள்ள படம் ‘கருடன்’. இதில் அவரது ஜோடியாக நடித்துள்ள ரேவதி சர்மா, கோடம்பாக்கத்து ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பி உள்ளார்.
இந்நிலையில், ‘கருடன்’ பட அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார் ரேவதி.
“தமிழகத்தின் தேனி மாவட்டத்தில்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தப் பகுதியில் நிறைய படப்பிடிப்புகள் நடைபெறும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் முதன்முறையாக தேனிக்குச் சென்றேன்.
“இயக்குநர் வெற்றி மாறன், சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் நடிக்கப் போகிறோம் என்ற நினைப்பே மனதில் ஒருவிதப் பதற்றத்தை ஏற்படுத்தியது.
“மூத்தவர்களான நடிகர் உன்னி முகுந்தன், வடிவுக்கரசி ஆகியோருடன் நடித்தது ஆனந்தமான அனுபவத்தை அளித்தது. அது மட்டுமல்ல, எனது பதற்றத்தைக் குறைத்து, பல்வேறு நடிப்பு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர்.
“பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில், திறந்தவெளியில்தான் படமாக்கப்பட்டன. விடிய விடிய படப்பிடிப்பு நடந்தாலும், ஒருவரையொருவர் ஜாலியாக கிண்டல் செய்தபடி இருந்ததால் எந்தவித சிரமமும் தெரியவில்லை. தங்களுடைய முந்தைய படங்கள் தொடர்பான அனுபவங்களையும் அவர்கள் சுவாரசியமாக விவரித்தனர். இவை எல்லாம் நீண்ட காலம் என் மனத்தில் நிலைத்திருக்கும்,” என்கிறார் ரேவதி.
ஊர் திருவிழா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குவது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பெரும் சவாலாக இருந்தது. வழக்கமாக திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகள் ஒருபக்கம் அணிவகுத்து நிற்க, வெளிப்புற படப்பிடிப்புக்குத் தேவையான ராட்சத விளக்குகளும் இருந்தனவாம்.
தொடர்புடைய செய்திகள்
“போதாத குறைக்கு கோடை காலத்து வெப்பமும் சேர்ந்து கொண்டதால், அனைவரும் மிக விரைவில் சோர்ந்து போனோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதிகாலை இரண்டு மணி அளவில் எடுக்கப்பட்ட காட்சியின்போது மொத்த ஊர் மக்களும் படப்பிடிப்பு நடந்த இடத்தில் கூடிவிட்டனர். இதனால் அக்காட்சி பிரம்மாண்டமாக அமைந்துவிட்டது.
“அதேசமயம் அன்பு மிகுதியால் சிலர் அத்துமீறிய தருணங்களும் இருந்தன. திரையில் பார்க்கும்போது தங்களுடைய முகம் தெரியவேண்டும் என்பதால், சில ரசிகர்கள் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்னே வருவர். எப்படியாவது நாயகன், நாயகிக்கு அருகே சென்றுவிட வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்காக இருக்கும். அவர்களை சமாளிப்பது சிரமம். இதனால் சில காட்சிகளைப் பலமுறை படமாக்க வேண்டியிருக்கும்.
“இறுதிச் சடங்கு தொடர்பான காட்சியில் நான் அழுதபடி இருக்க, அருகில் நின்றிருந்த ஒருவர் சிரித்த முகமாகக் காணப்பட்டார். மற்றொருவர் கேமராவைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். இவற்றை எல்லாம் கடந்துதான் காட்சிகளை எடுத்தோம்,” என்று சிரித்தபடி விவரிக்கிறார் ரேவதி.
ஒரு சண்டைக் காட்சிக்காக, செங்கல் சூளையில் இரண்டு நாள்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததாம்.
“கீழே விழுந்து கிடக்கும் என்னை சில ரவுடிகள் இழுத்துச் செல்லும் காட்சி அது. சண்டைக் கலைஞர்கள் என்னைத் தரதரவென இழுத்துச் சென்று, திடீரென விட்டுவிடுவார்கள். அந்தச் செங்கல் சூளை மண்ணும் சாம்பலுமாக இருந்தது. உளளே நிற்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நிற்பதுபோல் உணர்ந்தேன். எனினும் அக்காட்சி அருமையாக இருக்கிறது என்று இயக்குநர் பாராட்டியபோது, பட்ட சிரமங்கள் மறந்துபோயின,” என்கிறார் ரேவதி.

