கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் தேடி வந்தாலும் தனக்கேற்ற பாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார் யோகி பாபு.
ஒரு நாள் மட்டும் கால்ஷீட் ஒதுக்க பல லட்சம் ரூபாய் ஊதியம் கேட்கிறார், நாயகனாக இல்லாவிட்டாலும் நாயகனுக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை ஒதுக்குமாறு வலியுறுத்துகிறார் என்று யோகி பாபு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
ஆனால், இவையெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை என யோகி பாபு தரப்பு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
இந்நிலையில், கதை, அதற்கான களம், தனக்கான கதாபாத்திரம் என எல்லாம் மனநிறைவு தரும் வகையில் அமைந்ததை அடுத்து, ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு.
இது முழுக்க முழுக்க நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் படம் என்று இப்படத்தின் இயக்குநர்கள் வினீஸ், மது அம்பாட்டும் கூறுகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார் வினீஸ்.
அந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
“மருத்துவமனை பிணவறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தேன். மிக அழுத்தமான கதைக்களத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்துக்கு மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரஜன், சரபு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஏற்றிருந்தனர்.
“இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, நானும் மது அம்பாட்டும் இணைந்து ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தை உருவாக்கி உள்ளோம்.
“யோகி பாபுவின் திரைப்பயணத்தில் இது முக்கியமான, திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக அமையும்,” என்கிறார் வினீஸ்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்துக்கான தொழில்நுட்பப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

