பெற்றோரை இழந்துவிடுவேனோ என்ற பயம் எனக்கு சிறுவயதில் அதிகம்: ஜான்வி

பெற்றோரை இழந்துவிடுவேனோ என்ற பயம் எனக்கு சிறுவயதில் அதிகம்: ஜான்வி

2 mins read
5c56de4f-d935-4842-93fc-a47387ae14bb
ஜான்வி கபூர். - படம்: இணையம்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், நடிகர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்திருக்கும் ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பல்வேறு நகரங்களுக்குச் சென்று படத்தை விளம்பரம் செய்திருக்கின்றனர் படக்குழுவினர். சென்னையில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியை காண ராஜ்குமார்ராவும் ஜான்வியும் வந்திருந்தனர். மேலும் சென்னையில் தன் அம்மா ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ஜான்வி.

இந்நிலையில் தன் பெற்றோர் இரவில் தூங்கும்போது அவர்கள் மூச்சுவிடுகிறார்களா இல்லையா என பயந்து பலமுறை சோதனை செய்ததாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை இழந்துவிடுவோமோ என்கிற பயம் சிறு வயதில் இருந்தே தனக்கு அதிகம் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

“இரவில் அவர்கள் ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ, என்னை விட்டுவிட்டு பயணம் செய்தாலோ பயப்படுவேன். அவர்கள் என்னை வளர்த்த பராமரிப்பாளருடன் விமானத்தில் என்னை ஏற்றிவிட்டால் திரும்ப வர மாட்டார்கள் என நினைத்தது உண்டு. இரவு நேரத்தில் திடீரென்று கண் விழித்து அப்பா, அம்மாவின் அறைக்கு சென்று அவர்கள் மூச்சு விடுகிறார்களா என சோதிப்பேன். அது ஒரு பயம்,” என்றார் ஜான்வி.

“ஒரு குறிப்பிட்ட வயது தாண்டிய பிறகு பெற்றோர் நமக்கு பிள்ளைகள் ஆகிவிடுவார்கள். என் தந்தையை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என மேலும் தெரிவித்தார் ஜான்வி. அம்மா இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டார் ஜான்வி என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன் நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஸ்ரீதேவி இறந்தபோது தன் முதல் படமான தடக் படப்பிடிப்பில் இருந்ததாக ஜான்வி தெரிவித்தார்.

“நான் என் அம்மாவை இழந்து தவிப்பதாக அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அதற்கு அவரை வைத்து நான் விளம்பரம் தேடுவதாக என்னை விமர்சித்தனர். அந்த விமர்சனம் தன்னை பாதித்தது,” என ஜான்வி கூறினார்.

தடக் படத்தை விளம்பரம் செய்ய நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு விருந்தினரான சென்றிருந்தார் ஜான்வி. அங்கு ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் பாடல் காணொளிகள் ஒளிபரப்பப் பட்டன என்றும் அதை பார்த்து நான் கதறி அழுது கொண்டே கேரவேனை நோக்கி ஓடினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆனால் தொலைக்காட்சியில் நான் அழுததைக் காட்டவில்லை. அதனால் ஜான்வி தன் அம்மா இறந்த சோகம் கூட இல்லாமல் சந்தோஷமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. மக்களுக்கு நான் அழுத உண்மை தெரியாது,” என்றார் ஜான்வி.

குறிப்புச் சொற்கள்