‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்த கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் கல்யாணம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டது.
கல்யாண நேரத்திலேயே மஞ்சிமா மோகன் சமூக வலைத்தளங்களில் உருவக்கேலி செய்யப்பட்டார். அத்துடன் இவரின் திருமணம் தொடர்பாக இணையத்தில் சில வதந்திகள் பரப்பப்பட்டது.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது திருமணம் தொடர்பாக யூடிப் சேனல் ஒன்றில் மஞ்சிமா மோகன் பேசியுள்ளார். அதில், “என்னுடைய திருமணம் தொடர்பாக பல தவறான தகவல்கள் பரவியது. நான் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாக, என் மாமனாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றெல்லாம் பல பொய்யான தகவல்கள் பரவின.
“எல்லாமே ஜோடிக்கப்பட்ட பொய். இந்த வதந்திகள் எல்லாம் எங்கள் குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. திருமணத்துக்கு முன்பே இதெல்லாம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் திருமணத்துக்கு பின் இதுகுறித்து கவலைப்பட்டிருக்கிறேன். நான் கெளதமுக்கு ஏற்ற ஜோடி இல்லை என்பதை போன்ற கமெண்ட்களை பார்க்கும் போது வலிக்கும். அந்த சமயத்தில் தோல்வியடைந்தவளாக நான் உணர்வேன்.
“சிலர் தங்களின் திருமண புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை பார்த்து எனக்கும் அவ்வாறு பதிவிட வேண்டும் என தோன்றும். எங்களின் திருமணம் அறிவிப்பு வெளியான பிறகு எல்லாமே சோஷியல் மீடியா ஆகிவிட்டது. நான் இப்போதெலாம் மிகவும் கவனமாகவே பேசுகிறேன். ஏனென்றால் நாம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பேசவில்லை என்றால், நம்மை அதை வைத்தே மதிப்பிடுவார்கள்,” என மனம் திறந்து பேசியுள்ளார் மஞ்சிமா மோகன்.


