நடிகர் கவினும் நயன்தாராவும் புதுப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல் கோடம்பாக்க வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஷ்ணு எடாவன் இப்புதிய படத்தை இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
தன்னைவிட வயது குறைந்த இளையர் மீது ஒரு பெண்ணுக்கு காதல் ஏற்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், இதர பிரச்சினைகள் குறித்து அலசும் வகையில் கதை, திரைக்கதையை அமைத்துள்ளாராம் இயக்குநர்.
சிக்கலான கதைக்களம் என்றாலும் அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் இப்படம் தரமான படைப்பாக இருக்கும் என்று தயாரிப்புத் தரப்பும் சொல்கிறது.
கவினுக்கு இப்போது 33 வயதாகிறது. நயன்தாராவின் வயது 40. மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

