திரையுலகில் ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் எனில் அவர்களை மனநோயாளிகளாகக் கருத வேண்டும் என்கிறார் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி.
இத்தகைய செயல்பாடு, மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்குச் சமமானது என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படிப்பட்டவர்களைக் கடந்து செல்ல வேண்டுமே தவிர, பொருட்படுத்தக்கூடாது என்றும் இதுபோன்ற ஆட்கள் எப்போதுமே நம்மைச் சுற்றி இருப்பார்கள் என்றும் சமுத்திரக்கனி சாடியுள்ளார்.
“தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் நான் இயக்குநர் என்பதை மறந்துவிடவில்லை. ஆண்டுக்கு ஒரு திரைப்படமாவது எனது இயக்கத்தில் உருவாக வேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறேன்.
‘விநோதசித்தம்’ படத்துக்குப் பிறகு ஒரு தெலுங்குப் படத்தை இயக்கினேன். அடுத்து தமிழ்ப்படத்தை இயக்க இருக்கிறேன். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் படப்பிடிப்பு தொடங்கும்,” என்கிறார் சமுத்திரக்கனி.

