தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைதட்டல் பெற்றால் நாமும் கதாநாயகர்கள்தான்: சூரி

3 mins read
9068df75-4be7-4b12-826a-c00f42707396
சூரி. - படம்: ஊடகம்

கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு, திரையுலகம் குறித்த தனது பார்வை வெகுவாக மாறியுள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சூரி.

நகைச்சுவை நடிகராக இருந்த தாம், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்ததுதான் திரையுலகம் குறித்து தனது கண்ணோட்டம் மாறியதற்கு முக்கிய காரணம் என்று சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகப்பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முன்பெல்லாம் நகைச்சுவைப் படங்களை அதிகம் பார்த்து வந்தேன். எனினும், ஒரு கட்டத்தில் அவ்வாறு பார்ப்பதை நிறுத்தினேன். இப்போது நாயகனாகத் தொடங்கிய பின்னர் அனைத்துவிதமான படங்களையும் பார்க்கிறேன்.

“பல மொழிப் படங்களைப் பார்ப்பது முக்கியம் எனக் கருதுகிறேன். பெரும்பாலும் நாயகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, கதையை முன்னிலைப்படுத்தும் படங்கள்தான் எனது தற்போதைய தேர்வாக உள்ளது,” என்கிறார் சூரி.

ஒரு திரைப்படத்தின் நாயகன் என்றால் அது கதைதான் என்று குறிப்பிடுபவர், கதாநாயகன் என்பதற்கு வேறு ஓர் அர்த்தம் உள்ளது என்கிறார்.

“கதாநாயகன் என்றால் அவருக்கென ஓர் அறிமுகப் பாடல் இருக்க வேண்டும், நான்கைந்து சண்டைக் காட்சிகள், மூன்று பாடல் காட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

“ஆனால், என்னுடைய கண்ணோட்டம் மாறுபடுகிறது. எந்த நடிகர் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து கைதட்டல் பெறுகிறாரோ, அவர்தான் அப்படத்தின் கதாநாயகன்.

“ரசிகர்களைப் பொறுத்தவரை, தங்களை மகிழ்விக்கும் ஒருவர் திரையில் தோன்றி கச்சிதமாக நடிக்கும்போது அவரைப் பிடித்துப்போகிறது. அதன் அடையாளமாகத்தான் கைதட்டுகிறார்கள்.

“கதாநாயகன் என அறியப்படுபவரால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என நினைப்பது தவறு. துணை நடிகராக இருந்தாலும், ரசிகர்களை மகிழ்வித்து கைதட்டல் பெறும்போது அந்தத் தருணத்தில் அவர்தான் கதாநாயகன்,” என்கிறார் சூரி.

சூரி நடிப்பில் உருவாகி உள்ள ‘கருடன்’ படம் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று திரையுலகத்தினர் பாராட்டுகின்றனர்.

படத்தின் நாயகன் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில், விசுவாசம் அல்லது நீதி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

“இதனால் சில பிரச்சினைகள் உருவாகின்றன. இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

“இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்கள் நடித்த பல படங்களில் நான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

“நான் கதாநாயகனாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருவரும் பாராட்டினர். மேலும், எனது நடிப்புத்திறமை வெகுவாக வளர்ந்திருப்பதாகவும் கூறி ஊக்கமளித்தனர்.

“சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் மீண்டும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுவதுண்டு. பல சமயங்களில் எனது மனதில் இருப்பதைப் புரிந்துகொண்டு இருவருமே எனக்காக அக்காட்சிகளில் மீண்டும் நடித்தனர்.

“நீண்ட காலமாக என்னால் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது.

“நல்ல, அழுத்தமான கதாபாத்திரங்களாகத் தேடி வருகிறேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தேடல் இருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். மலையாளம், இந்தி மொழிப் படங்களில் நடிப்பீர்களா என்றும் கேட்கப்படுகிறது.

“முழுக்க நகரப் பகுதிகளில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று வரிசையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தற்போது என் பதில் சுருக்கமாகத்தான் இருக்கும்.

“கதை அனுமதிக்கும் பட்சத்தில், எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயார். குறிப்பிட்ட கதாபாத்திரம்தான் தேவை என்று எனக்கு நானே வேலி அமைத்துக்கொள்ளவில்லை.

“நகரத்தை மையப்படுத்தும் கதை என்றால், ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களைப் போல் இருக்க வேண்டும்,” என்கிறார் சூரி.

தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடிக்கும் ஆசை இருந்தாலும், அது அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது என்றும் உலக அளவில் பெரிய கலைஞர்கள்கூட திரை வாழ்க்கையில் சில தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

“எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படுகிறேன். ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

“இதுவரை நான் தேர்வு செய்த கதைகள் எனக்கு ஏமாற்றம் தந்ததில்லை. எனது இத்தனை ஆண்டு கால அனுபவம் எதுவரை என்னை அழைத்துச் செல்லும் என்பது தெரியவில்லை,” என்கிறார் சூரி.

குறிப்புச் சொற்கள்