கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘அரண்மனை 4’ படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சியை வெகுவாகப் பாராட்டி உள்ளார் தமன்னா.
கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உரு வாகியுள்ள ஒரு தென்னிந்திய படம் ரூ.100 கோடி வசூல் கண்டுள்ளது பெருமிதம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இயக்குநர் சுந்தர்.சி. இந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெறக்கூடியவர். அந்த அளவுக்கு நேர்த்தியாகச் செயல்பட்டு, நன்கு திட்டமிட்டு தனது படங்களை அவர் உருவாக்குகிறார்.
“நவீன தொழில்நுட்பத்தை அவர் கையாளும் விதம் அலாதியானது, அழகானது. அவரது இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்,” என்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசும்போது தமன்னா குறிப்பிட்டார்.
தென்னிந்திய மொழிகளில் ரூ.100 கோடி வசூல் கண்டுள்ள ‘அரண்மனை 4’ படத்தை சூட்டோடு சூடாக மொழிமாற்றம் செய்து இந்தியில் வெளியிட்டுள்ளார் சுந்தர்.சி.
மே 31ஆம் தேதி வட இந்தியாவில் வெளியிடப்பட்ட ‘அரண்மனை 4’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதில் கலந்துகொண்டு பேசும்போதே சுந்தர்.சி.யை பாராட்டித் தள்ளினார் தமன்னா. தற்போது இவருக்கு 34 வயதாகிறது. திருமணம் ஆன பிறகுதான் தனது திரைப்பயணத்தில் ஆக அதிகமான ஊதியத்தை பெறுவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட தமன்னா தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது உடல் எடையும் அதிகரித்துள்ளது.
‘காணி’ என்ற தெலுங்கு படத்தில் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதற்காக அவருக்கு பெருந்தொகை ஊதியமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் புதிய இணையத் தொடர் ஒன்றில் அரை நிர்வாண காட்சியில் நடிக்கவும் தமன்னா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல். முக்கியமான காட்சி என்பதாலும் கதைக்கு மிக அவசியம் என்பதாலும் இவ்வாறு நடிக்க அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
’ஜீ கார்ட்டா’, ’லஸ்ட் ஸ்டோரி’ ஆகிய இணையத்தொடர்களில் நடித்த பிறகு திரைப்படங்களுக்கு இணையாக இணையத்தொடர்களுக்கும் கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்துள்ளாராம்.
“‘அரண்மனை 4’ படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. உண்மையில் நான் தற்போது நடித்துவரும் சில கதாபாத்திரங்களுக்காக சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது. ‘டூப்’ போடாமல் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனினும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அதற்கு என்னை அனுமதிப்பதில்லை.
“சண்டைக் காட்சிகளில் நடிப்பதன் மூலம் ரசிகர்களை மேலும் கவர முடியும். இதற்கு ‘பாகுபலி’ படத்தில் நான் நடித்த காட்சிகளே உதாரணம். எனவே சண்டை போடுவதும் நல்லதுதான்,” என்கிறார் தமன்னா.
அண்மைக் காலமாக தாம் தெரிவிக்கும் கருத்துகள், ஊடகங்களில் திரித்து வெளியிடப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், திரையுலகின் மேற்பரப்பு மிக அழகாக காட்சி அளிக்கும் என்றும் பல தருணங்களில் அது வேறு மாதிரியாக காட்சி அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
“மிகவும் சிரமப்பட்டு சில காட்சிகளைப் படமாக்குவோம். ஆனால், திரையில் அவற்றைப் பார்க்கும் ரசிகர்கள் எந்தவித மெனக்கெடுதலும் இல்லாமல், எளிதில் நடித்திருப்பதாகக் கருதுவார்கள்.
“இதனால் அவ்வப்போது மனச்சோர்வு ஏற்படும் என்றாலும், என் நடிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இன்றி செயல்பட்டு வருகிறேன்.
“கடினமோ, எளிதோ என்னுடைய உழைப்பில் குறைகாண முடியாது. பிறர் என் உழைப்பை எதிர்மறையாக விமர்சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்,” என்கிறார் தமன்னா.

