அனைவரும் உயிரைக் கொடுத்து நடித்தோம்: வாணி போஜன்

அனைவரும் உயிரைக் கொடுத்து நடித்தோம்: வாணி போஜன்

3 mins read
71b52236-c798-4402-9f8c-2499f86dd63d
வாணி போஜன். - படம்: ஊடகம்

‘அஞ்சாமை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பட நாயகி வாணி போஜன், தனக்கு மிகவும் மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்ததாகவும் அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், ரகுமான், பாலசந்திரன், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலாசரண் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படம் ஜூன் 7ஆம் தேதி வெளியீடு காண உள்ள நிலையில், இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

இதில் கலந்துகொண்டு பேசிய வாணி போஜன், தனது திரை வாழ்க்கையில் ‘அஞ்சாமை’ மிக முக்கியமான படைப்பு என்றார்.

“நமக்கு மிகவும் நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்கள் குறித்து அடிக்கடி நலம் விசாரிப்போம். அப்படிப்பட்ட உயிருக்கு உயிரான படைப்புதான் இந்த ‘அஞ்சாமை’.

“இப்படத்தை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். எந்தப் படத்தில் வேலை பார்க்கச் சென்றாலும் இந்தப் படம் குறித்த நினைவுகள் மனதில் நிழலாடும்.

“நான் மட்டும் அல்லாமல் படக்குழுவில் இருந்த அனைவரும் இப்படத்துக்காக உயிரை கொடுத்து வேலை பார்த்துள்ளோம்,” என்றார் வாணி போஜன்.

இப்படத்தில் இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த வாணி போஜன், தாம் அவ்வாறு நடிக்க முன்வரவில்லை என்றால் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என்றார்.

இப்படிப்பட்ட கதாபாத்திரமும் படமும் அமைந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றார் அவர்.

“ஒரு நடிகையாக, சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு பெண்ணாக இப்படத்தில் நடிக்க இயலாது என்று சொல்ல முடியாது. அதை மனப்பூர்வமாக உணர்ந்ததால்தான் என்னுடைய நூறு விழுக்காடு உழைப்பை கொடுத்திருக்கிறேன்.

“என் உள் உணர்வுதான் இவ்வாறு சொல்ல வைக்கிறது. இப்படத்தை உருவாக்க இயக்குநர் சுப்புராமன் எதிர்கொண்ட பல்வேறு சிரமங்களையும் வலியையும் கண்கூடாகப் பார்த்தேன்,” என்று குறிப்பிட்டபோது மேடையிலேயே கண்கலங்கினார் வாணி போஜன்.

பின்னர் சற்று சுதாரித்துக்கொண்ட அவர், ‘அஞ்சாமை’ படக்குழுவினர் மீண்டும் ஒன்றாகக் கூடியிருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த நிகழ்வு நடைபெறும் நாள் தமது வாழ்க்கையில் ஆக மகிழ்ச்சியான நாளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இப்படத்தின் நாயகன் விதார்த் நல்ல நடிகர். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்துவார்.

“நான் முன்னாள் நாயகி ரேவதிபோல் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். ரேவதி போல் இருக்க ஆசையா அல்லது ரம்பா போல் இருக்க ஆசையா? என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு.

“எதற்காக நான் இன்னொரு நடிகையைப் போன்று இருக்க வேண்டும். அவர்களைப் போன்று நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லாம் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் என்றும் நானாகவே இருக்க விரும்புகிறேன்,” என்றார் வாணி போஜன்.

அஞ்சாமை திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இதுபோன்ற தரமான படைப்புகளுக்கு தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என நம்புவதாக வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆதரவு இருந்தால்தான் நல்ல படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் வாணி, அதிக ஊதியம் கேட்பதில்லை என தயாரிப்பாளர்கள் பாராட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்