சென்னையில் நடைபெற்ற ‘இந்தியன்-2’ இசை வெளியீட்டு விழாவில், மகள் ஷ்ருதிஹாசன், நடிகர் டி ராஜேந்தர் குறித்தும் அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
“எனது வயதைவிட 15 வயதுதான் ‘இந்தியன்’ தாத்தாவுக்கு அதிகம்,” என்று கூறியவர், “இயக்குநர் ஷங்கர் அன்று பார்த்தது போலவே அதே துடிப்புடன்தான் இப்போதும் உள்ளார். அவரது ஆர்வம் துளியும் குறையாமல் உள்ளது.
“பலரிடமும் பல விஷயங்களையும் கற்றுக்கொண்டதால்தான் இன்று ரசிகர்களாகிய உங்கள் முன்பு நிற்கிறேன்,” என்றார்.
“நாட்டின் ஒற்றுமையைக் காக்கவேண்டியது நமது கடமை என்பதைத்தான் ‘இந்தியன்-2’ படம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
“ஷ்ருதிக்கு திருமணம் ஆகியிருந்தால் நானும் தாத்தா ஆகியிருப்பேன்,” எனப் பேசி சிரித்தவர், “ஒரு முறை நடிகர் டி. ராஜேந்தர் என்னைக் கட்டிப்பிடித்து, ‘நீங்கள் சினிமாவை விட்டுப் போகக்கூடாது என அழுதார். நான் இங்கு நிற்பதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்,” என்று பேசினார் கமல்ஹாசன்.
உலகில் யாராலும் முடியாது
விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “6 மணி நேரம் ஒப்பனை செய்து 70 நாள்கள் நடித்திருக்கிறார். ஒரு காட்சியை 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கிக்கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்துகொண்டே நடிக்கவேண்டும். உலகில் யாராலும் முடியாத ஒரு காரியத்தை கமல்ஹாசன் செய்துள்ளார்,” என்றார்.
உடல்நலனில் அக்கறை முக்கியம்: சிம்பு
தொடர்புடைய செய்திகள்
‘இந்தியன் - 2’ இசை வெளியீட்டு விழாவில் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வந்து கலந்துகொண்ட நடிகர் சிம்பு, “பல முறை ‘இந்தியன்’ படத்தை பார்த்துள்ளேன். இப்போது கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் கமல்ஹாசனின் தேடல் வியப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல், மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் படங்களைத்தான் ஷங்கர் கொடுப்பார்.
“நான் உடல் எடையை குறைத்தது பற்றி பலரும் கேட்கிறார்கள். இது ஆன்மிகம் சார்ந்த விஷயம். எல்லோரும் நம்மை விட்டு ஒருநாள் போய்விடுவார்கள். ஆனால், நமது உடல்தான் நம்முடன் சேர்ந்து இருக்கும். அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இதை நான் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்,” என்று பேசினார்.

