தமிழ்த் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தன் காதலருடன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னுடன் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜவேலு என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். ராஜவேலு தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியா, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது பதிவில் அவர், “சிட்னி உண்மையில் எனது இரண்டாவது வீடு, பலமுறை இந்த நகருக்கு வருகை தந்துள்ளேன். இந்த இடம் மிகவும் அழகாக இருக்கும். இந்த ஊரின் மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதைக் கவனித்தேன்.
“ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நகரத்துக்கு சென்றேன். எனக்கு விருப்பமான பல இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். ஒரு நீண்ட நடைபயணத்தை மேற்கொண்டது, காபி குடித்தது, அந்நாட்டு மக்களுடன் பேசியது, இரவில் ஒளிரும் நகரத்தை அமைதியாக உட்கார்ந்து ரசித்தது என ஓர் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தேன்.
“அமைதியான நகரில் அழகான நினைவுகள் மனதில் நிழலாடுவது மகிழ்ச்சி தருகிறது. இந்தத் தருணம் எங்களுக்குப் பிரபஞ்சம் வழங்கிய அற்புதமான தருணம், அதற்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார். பிரியாவுக்கு சில வருடங்களில் திருமணமாகும்போது இரண்டாவது வீடான சிட்னியில்தான் வசிப்பார் எனத் தெரிகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகத் தனது பணியை ஆரம்பித்த பவானி சங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.
அந்தத் தொடர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ‘மேயாத மான்’ திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்து நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’, ‘பத்து தல’, ‘ரத்னம்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரியா பவானி கைவசம் ‘இந்தியன் 2’, ‘டிமாண்டி காலனி 2’, ‘ஜீப்ரா’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவற்றில் ‘இந்தியன் 2’ படம் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படங்களில் நடிப்பதுடன் சென்னையில் லியாம்ஸ் டைனர் என்ற உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் பிரியா பவானி.
திருமணத்திற்கு முன்னர் சித்தார்த்-அதிதி சுற்றுலா
நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த வருடத்தின் கடைசியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் தற்போது இத்தாலியில் உள்ள டஸ்கன் நகரில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
தாங்கள் இருவரும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு 11 லட்சம் பேர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர்.
சித்தார்த் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் அவர் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளது வியப்பளிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப் படுகிறது. ‘பாய்ஸ்’ படத்தில் இயக்குநர் ஷங்கர்தான் சித்தார்த்தை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.


