தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் வாழ்க்கையை விவரிக்கும் படம்

3 mins read
1dadaed3-fb3c-4639-b8c7-d7fdae470164
விமல். - படம்: ஊடகம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘போகும் இடம் வெகு தூரமில்லை’ இதில் விமல் நாயகனாகவும் கருணாஸ் மற்றொரு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். அண்மையில் வெளியீடு கண்ட இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இந்தப் படத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார் இயக்குநர் மைக்கேல் ராஜா.

தமது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட வலியையும் வேதனையையும் இப்படத்தின் மூலம் பதிவுசெய்து இருப்பதாகக் குறிப்பிடும் அவர், தனது படத்தின் நாயகனும் இதேபோன்ற அனுபவங்களைக் கடந்து வருவதுபோல் படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது என்கிறார்.

“எனக்கு மட்டுமல்லாமல் பலருடைய வாழ்க்கையிலும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். எனவே ரசிகர்கள் இந்தப் படத்துடன் தங்களை எளிதில் பொருத்திப்பார்க்க இயலும்.

“படத்தின் தலைப்பு நன்றாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். இது நல்ல குடும்பக் கதையாக உருவாகும் படம். 70 விழுக்காடு காட்சிகள் பயணத்துடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கும்.

“அமரர் ஊர்தி ஓட்டுநரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இதற்கு முன்பு வெளியான ‘அயோத்தி’ படத்துடன் எனது படத்தின் கதையை தொடர்புபடுத்தி ஒரு தரப்பினர் பேசுகிறார்கள். இரு படங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதை தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன்,” என்கிறார் இயக்குநர் மைக்கேல் ராஜா.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட ஒரு சடலத்துடன் நாயகன் விமல் செல்கிறார். வழியில் கூத்துக்கலைஞர் கருணாஸை அவர் சந்திக்க நேரிடுகிறது. ஏற்கவும் இயலாத, தவிர்க்கவும் முடியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் கருணாஸ். வேறு வழியின்றி அவரையும் தனது பயணத்தில் இணைத்துக் கொள்கிறார் விமல்.

இரு துருவங்களாக பயணத்தைத் தொடங்கும் அவர்கள் இருவருக்கும் இடையே மெல்ல நட்பு செடி துளிர் விடுகிறது. இருவரும் சம்பந்தப்பட்ட படத்தின் இறுதிக்காட்சி எதிர்பாராத ஒன்றாக இருக்குமாம்.

“ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் என்பதுதான் இப்படம் தெரிவிக்கும் முக்கியமான கருத்து. எல்லாரும் வெவ்வேறு தேவைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவரவர் தேவை அவரவர்களுக்கு நியாயமான ஒன்றாகத் தெரியும்.

“யாரையும் முழுமையாக கெட்டவர்கள் என்று சொல்லிவிட இயலாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்களின் செயல்பாடுகள் நம் பார்வைக்கு தீங்கானவையாக தோன்றக்கூடும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு முடிந்த அளவுக்கு யதார்த்தமான ஒரு படைப்பை தர முயற்சி செய்துள்ளேன்,” என்கிறார் மைக்கேல் ராஜா.

“விமலைப் பொறுத்தவரை தன் கையால் சடலங்களை தூக்கி, கையாண்டு வேலை செய்வதால் ஒருவித இருக்கமான மனநிலையில் காணப்படுவார். எந்தவிதமான உணர்வுகளும் அவரை பெரிய அளவு பாதித்து விடாது. தனது கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உள்வாங்கிக்கொண்டு கச்சிதமாக நடித்துள்ளார். ஒரு நடிகராக அவரை தங்கத்துடன் தான் ஒப்பிட வேண்டும்.

ஒரு சிலர் அவரைப்பற்றி எதிர்மறையான கருத்துகளை முன்வைத்தனர். அவற்றை கேட்டு நானும் துவக்கத்தில் பயந்து விட்டேன். ஆனால் விமல் முழுமையாக ஒத்துழைத்தார். முதல் நாள் மட்டுமே சற்று தாமதமாக படப்பிடிப்புக்கு வந்தாரே தவிர அதன் பிறகு சொன்ன நேரத்திற்கு வந்து விடுவார்.

விமல் குறித்து ஊடகங்கள் வெளியிடும் பொய்யான தகவல்களால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் மைக்கேல் ராஜா கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்