இப்போதெல்லாம் ஓய்வு கிடைத்தால் இளம் நடிகைகள் பலர் உடனடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுகிறார்கள்.
நாடு திரும்பியதும் சுற்றுலா சென்று வந்த நாடுகளின் அருமை பெருமைகளை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் நீளமாக பதிவிடுவதையும், புகைப்படங்கள், காணொளிகளைப் பகிர்ந்து கொள்வதையும் அவர்கள் மறப்பதில்லை.
தற்போது நடிகைகளின் இந்த போக்கில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள், ஆங்காங்கே உள்ள சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பதில் நடிகைகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள சுற்றுலாத் தலங்களை பட்டியலிட்டுக்கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கத் திட்டமிட்டுள்ளாராம் நடிகை ஆண்ட்ரியா.
அந்த வகையில் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்று வந்துள்ள அவர், அப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் தமது சமூக ஊடகப் பதிவில் சிக்கிம் மாநிலத்தின் அழகு குறித்தும் அவர் வர்ணித்துள்ளார்.
“இதுவரை சிக்கிம் பயணம் நல்ல சாகசமாக அமைந்துள்ளது. சில இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் நிலச்சரிவு காரணமாக எல்லாவற்றிலும் குளறுபடியாகி விட்டது.
தொடர்புடைய செய்திகள்
“பல சாலைகள் திடீர் என மூடப்பட்டன. எனவே திட்டமிட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வேறு இடத்திற்குச் சென்றோம். அங்குள்ள சில இடங்களும் எனக்குப் பிடித்தமானதாகிவிட்டன,” என்று ஆண்ட்ரியா தமது ஊடகப்பதிவில் தெரிவித்துள்ளார்.’
“வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்திய குடிமக்கள் சுற்றுலா செல்வது அதிகரிக்க வேண்டும். அதிகமானோர் சுற்றுலா சென்றால்தான் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறும்,” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறாராம் ஆண்ட்ரியா.