அண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படங்களின் வெளியீடு மீண்டும் அதிகரிக்கும் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 7ஆம் தேதி (நாளை) ஐந்து படங்கள் வெளியீடு காண உள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வரும் 10ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் திரை அரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் மெல்ல குறைவது வழக்கமான ஒன்றுதான்.
எனவே விடுமுறை முடிவதற்குள் புதுப்படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களும் விநியோகிப்பாளர்களும் இயன்ற விரைவில் படங்களை வெளியிடுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதி ஐந்து படங்கள் வெளியீடு காண உள்ளன.
‘அஞ்சாமை’, ’ஹரா’, ‘இனியொரு காதல் செய்வோம்’, ’நிஷா’, ‘வெப்பன்’ ஆகிய ஐந்து படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், கமல் நடித்த ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகம் மறுவெளியீடு காண உள்ளது.
பெரிய நடிகர்கள், பெரிய நிறுவனங்களின் படம் எதுவும் வெளியாகவில்லை. வளர்ந்து வரும் நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள் தான் வெளியாக உள்ளன.
கடந்த வாரம் வெளியீடு கண்ட நடிகர் சூரியின் ‘கருடன்’ படத்தின் வசூல் நன்றாக உள்ளது. எனவே அந்தப் படமும் கணிசமான திரை அரங்குகளை ஆக்கிரமிக்கும்.
மேலும், தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் வெளியீடும் தள்ளிப் போகிறது. ஒரு வேளை அந்தப்படம் வெளியீடு கண்டிருந்தால் தற்போது வெளியாகும் ஐந்து படங்களில் ஒன்றிரண்டு படங்கள் பின்வாங்கி இருக்கக்கூடும். நடப்பாண்டில் வெளியீடு கண்ட எந்த படமும் பெரிய அளவில் வசூல் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

