தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையுலகில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்: ராஷி கண்ணா

2 mins read
3e1f40d0-d544-4fca-a2c9-1614fa0530bf
நடிகை ராஷி கண்ணா. - படம்: ஊடகம்

திரையுலகமும் கலையுலகமும் ஆண்பால், பெண்பால் பேதம் பாராமல் அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும் எனத் தான் விரும்புவதாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

“கலையின் மதிப்பீடு அதன் தன்மையைப் பொறுத்திருக்க வேண்டுமே தவிர பால் பேதங்களைப் பொறுத்திருக்கக்கூடாது. சினிமா இவற்றையெல்லாம் கடந்திருக்க வேண்டும்.

“உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், ஆண்கள், பெண்களின் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. காலப்போக்கில் இது மாறுமென நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார் ராஷி கண்ணா.

டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா நடிகை, மாடல் அழகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் இவர், தனது எதிர்கால லட்சியமாக பாடகியாக வேண்டும், ஆட்சியராக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர்.

சில விளம்பரப் படங்களில் தலைகாட்டியவரை காலம் திரையுலகில் கொண்டுபோய் விட்டுள்ளது.

தொடக்கத்தில் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

அதன்பின் ‘அடங்கமறு’, ‘அயோக்யா’ எனத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். கார்த்தியுடன் ‘சர்தார்’, தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக கவர்ச்சிப் புகைப்படங்களை விதவிதமாக எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் 90 கோடிக்கும் மேல் வசூலில் சாதித்து சாதனை படைத்துள்ளது. ‘மேதாவி’ படத்திலும் ராஷி நடித்து வருகிறார்.

‘அரண்மனை 4’, ‘ஃபார்ஸி’ இணையத்தொடரின் வெற்றி ராஷி கண்ணாவுக்குச் சிறந்த வரவேற்பை கோலிவுட்டில் பெற்றுத் தந்துள்ள நிலையில், அடுத்தடுத்து டோலிவுட், பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

‘அரண்மனை 4’ படத்தை இயக்கி, நடித்துள்ள சுந்தர் சியைப் பாராட்டிப் பேசியுள்ள ராஷி கண்ணா, “சுந்தர் சி போன்ற பெண்களை நம்பி படம் எடுக்கும் இயக்குநர்கள் சினிமாவில் இன்னும் அதிகரிக்க வேண்டும்,” என்று முன்னதாக நேர்காணல் ஒன்றில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தன்னுடைய உடலை ஆரோக்கியமாகவும் கட்டுடலுடனும் வைத்துக்கொள்ளும் ராஷி கண்ணா, தொடர்ந்து ரசிகர்களைத் தனது அழகாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து வருகிறார். இதற்காக அதிகம் மெனக்கெடுவதாகவும் கூறியுள்ளார்.

தினந்தோறும் யோகா பயிற்சி செய்வதுடன் உடற்கட்டை மேம்படுத்தும் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

தினசரி உடற்பயிற்சியுடன் நடனத்தையும் சேர்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ள ராஷி கண்ணா, இதற்காக பாலி நடனத்தையும் கற்றுக்கொண்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்