சிவா படத்தில் சல்மான்கான்; வேகம் காட்டும் முருகதாஸ்

சிவா படத்தில் சல்மான்கான்; வேகம் காட்டும் முருகதாஸ்

2 mins read
f136a9f6-aab3-47cc-9208-d77dad276ee5
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

வசூல் ரீதியிலான வெற்றிப் படங்களை கொடுக்கத் தொடங்கிய பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனிடம் புதுவிதமான வேகத்தையும் திட்டமிடுதலையும் பார்க்க முடிகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்கே 23’ படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கான படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தையும் ஒருசேர இயக்குகிறார் முருகதாஸ்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் திரைகாண உள்ளது. இந்நிலையில் சிவா, முருகதாஸ் ஆகிய இருவருக்குமே அடுத்தடுத்த படங்களை சற்று விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம்.

பொதுவாக பாலிவுட்டில் தயாராகும் படங்களுக்கு ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை படப்பிடிப்பை நடத்துவது வழக்கம். முழுப் படத்தையும் திட்டமிட்டு முடித்து வெளியீடு செய்ய மூன்றாண்டுகள் ஆகக்கூடும். சல்மான்கானை வைத்து இயக்குவது மிகப்பெரிய வாய்ப்பு என்பதால் சிவா நடிக்கும் படத்தை வேகமாக முடிக்க விரும்புகிறாராம் முருகதாஸ்.

அதேபோல் ‘அமரன்’ படத்துக்குப் பிறகு ‘எஸ்.கே.23’ படத்தின் தலைப்பு வெளியிடப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாகவும் சஞ்சய் தத், பிஜூமேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் மிரட்டலான சண்டைக்காட்சிகள் உள்ளனவாம். மேலும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்க அதிக காலம் தேவைப்படுமாம்.

சிவா, முருகதாஸ் ஆகிய இருவருக்குமே நேர நெருக்கடி இருப்பதால் தங்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, தங்களுடைய படத்தில் சல்மான்கான் நட்புக்காக ஓரிரு காட்சிகளில் நடிக்க இயலுமா என்று சிவா கேட்க, முகம் மலர்ந்த முருகதாஸ் ‘இதுவும் நல்ல யோசனைதான் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றாராம்.

சஞ்சய் தத் போன்ற அனுபவ நடிகருடன் இணைந்து நடிப்பது பெரும் உற்சாகம் அளிப்பதாக தனக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களிடம் கூறுகிறாராம் சிவா.

இதன் மூலம் திரையுலகம் சார்ந்த பல பயனுள்ள ஆலோசனைகளைப் பெற முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் படங்கள் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடிப்பதை அடுத்து, அவரது புதுப் படங்களுக்கு விநியோகிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

அவரது வளர்ச்சி குறித்த இதுபோன்ற தகவல்கள் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்