பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்களால் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்கள் பாதிக்கப்படுவதாக ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் ‘வணங்கான்’, ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
“பெரிய படங்களின் ஆதிக்கத்தால் சிறிய படங்களுக்கு வசூல் பாதிப்பு, போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போவது என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது.
“குறைந்த செலவில் உருவாகும் படங்கள் இத்தகைய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படும்போது அதற்கான உழைப்பு, பொருளாதாரம் முழுவதுமாக வீணாகிப் போகிறது.
“திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த சிக்கலுக்கு வழி காண வேண்டும்,” என்று சுரேஷ் காமாட்சி வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே, ‘வணங்கான்’ படம் விரைவில் திரைகாண உள்ளது.