‘பிடி சார்’ படத்தின் மூலம் யார் மனதையும் புண்படுத்தவில்லை என அப்படத்தின் நாயகன் ஆதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் திரையரங்குகளில் வெளியீடு கண்ட இப்படத்தின் வசூல் மனநிறைவு தரும் வகையில் உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆதி, இந்தப் படத்தில் தம்மை கதாநாயகனாக தேர்வு செய்தமைக்காக தயாரிப்பாளருக்கு நன்றி என்றார்.
படக்குழுவில் இருந்த அனைவருமே முழு அர்ப்பணிப்புடன் உழைத்ததாக பாராட்டிய அவர், நடிகர் முனிஸ்கானுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்றார்.
“வசூல் ரீதியில் வெற்றிபெற்ற படம் என்பதை விட எனக்கு மனதளவில் பெரும் நிறைவை அளித்த படம் இது. படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ரேசன் கடை ஊழியர்கள் குறித்து அவதூறு செய்வதாக உள்ளது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
“படத்தில் எந்த ஒரு காட்சியிலும் எல்லை மீறக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதையும் மீறி யார் மனதாவது புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் ஆதி.

