சிறு வயதிலேயே என்னை ஈர்த்த நடிகர்: பிரியங்கா

சிறு வயதிலேயே என்னை ஈர்த்த நடிகர்: பிரியங்கா

3 mins read
017d368b-dbea-4a9e-9472-7a4e2d70f85f
பிரியங்கா மோகன். - படம்: ஊடகம்

திரையுலகில் அறிமுகமாகமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவுக்கு மிகச்சிறந்த பொறியியல் நிபுணர் கிடைத்திருப்பார் என்று சொல்லிச் சிரிக்கிறார் பிரியங்கா மோகன்.

அவர் குறிப்பிடும் நிபுணர் வேறு யாருமல்ல, அவரே தான்.

பொறியியல் படிப்பை முடித்ததும் நிரந்தரமான நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்ததாம்.

“திரையுலகில் கால் பதிக்க வாய்ப்பின்றிப் போயிருந்தால், இந்நேரம் பெரிய நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியம் பெற்று சராசரிப் பெண்ணாக வாழ்ந்திருப்பேன். என்னுடைய அதிகபட்ச கனவே அவ்வளவுதான்.

“ஆனால் காலம் என்னை நடிகையாக்கிவிட்டது. இப்போது திரைத்துறையிலும் ரசித்து, அனுபவித்து எனது வேலையைச் செய்ய முடிகிறது,” என்று சொல்லும் பிரியங்கா, சிறு வயதிலேயே ஒரு நடிகரின் மீது தமக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

அந்த நடிகர் ஹாலிவுட்டைச் சேர்ந்த பிராட் பிட். தமிழ்த் திரையுலகில் இவருக்குப் பிடித்தமான நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினியின் நடிப்பும் எளிமையும் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

“என்றாவது ஒருநாள் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். அது சீக்கிரமே நிகழ்ந்தால் மகிழ்வேன். எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது உண்மையல்ல.

“திருமணம் என்பது நல்ல விஷயம். எனவே அதை மறைக்கத் தேவை இல்லை. திருமணம் நிச்சயம் ஆகும்போது உரிய அறிவிப்பை வெளியிடுவேன்,” என்கிறார் பிரியங்கா.

தற்போது தெலுங்கு, தமிழில் நல்ல கதைகள் தேடி வருகின்றன என்றும் அவற்றை ஏற்பதில் அவசரம் காட்டவில்லை என்றும் சொல்கிறார்.

தமிழ் ரசிகர்கள் தனது நடிப்பை வெகுவாக ரசித்துப் பாராட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆதரவை தக்கவைக்க கடுமையாக உழைக்கத் தயார் என்கிறார்.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தபோது, தனது படத்தில் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சிவா வலியுறுத்தியது வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது எனப் பாராட்டுகிறார் பிரியங்கா.

“பக்கத்து வீட்டுப் பெண் போன்ற பாத்திரங்களில் நடிப்பது உற்சாகம் தருகிறது. ‘டாக்டர்’ படத்தில் நகைச்சுவை, சோகம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடித்ததற்காக பலர் பாராட்டு தெரிவித்தனர்.

“இது நீடித்தால் போதும். திரைத்துறை எனக்கு நல்ல அனுபவங்களை மட்டுமே தரும் என எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் பிரியங்கா.

இதற்கிடையே பிரியா மோகனின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு படத்தில் நடிக்க இவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். விளம்பரப் படங்களில் நடிக்க முன்னணி நாயகிகள் என்ன தொகை பெறுகிறார்களோ, அதில் பாதி கிடைத்தால்கூட போதும் என்கிறாராம்.

பிரியங்காவின் சொத்து மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூ.17 கோடி என்கிறார்கள். ரூ.64 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை தான் பயன்படுத்துகிறார்.

தமிழில் ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’, ‘கேப்டன் மில்லர்’ என வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா.

தமிழைப் போல் தெலுங்கிலும் இளம் நாயகர்களுடன் நடிக்க கதை கேட்டு வருகிறாராம். தமிழில் ஆண்டுக்கு இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம்.

அதே சமயம் நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதும் முக்கியம் என்கிறார் பிரியங்கா மோகன்.

குறிப்புச் சொற்கள்