கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமானில் நடைபெற்று வருகிறது. கடந்த 2ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியதாகவும் அந்தமானின் பல்வேறு பகுதிகளில் முக்கியமான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் ஜோ ஜோ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர்.
அந்தமான் சண்டைக் காட்சிகள் சண்டை பயிற்சியாளர் கீ.சா.காம்பத்தி மேற்பார்வையில் படமாக்கப்பட்டு வருகின்றன. கீ.சா. இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’, அட்லியின் ‘ஜவான்’ ஆகிய படங்களில் பணியாற்றியவர்.
எனவே சண்டைக்காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என படக்குழுவினர் இப்போதே உத்தரவாதம் அளிக்கின்றனர். அந்தமானில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.
இந்த முதல்கட்ட படப்பிடிப்புக்காக சூர்யா 30 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளாராம். எனவே, ஒரு நாளைக்கூட வீண் அடிக்காத வகையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் படத்தின் முதல் தோற்ற காணொளியை வெளியிடுவார்களாம்.
அதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் சிறப்பு காணொளி தொகுப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவைப் பொறுத்தவரை அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்க உள்ளார். இதற்காக வெற்றிமாறன், ரவிகுமார், லோகேஷ் கனகராஜ், ஞானவேல், கார்த்திக் சுப்புராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு அவர் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டை அவர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

