இந்தியத் திரையுலகில் நடிகைகளைக் காட்டிலும் நடிகர்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. அதிலும் குறிப்பாக, சம்பள விஷயத்தில் நடிகர்களின் உயரத்தை நடிகைகளால் எட்டிப் பிடிக்க முடியவில்லை.
இருப்பினும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில நடிகைகள் அதிகம் சம்பளம் பெறுகின்றனர். அதேபோல் அவர்களது ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு உள்ளது.
அந்த வகையில் இந்தியத் திரையுலகில் அங்கம் வகிக்கும் பணக்கார நடிகைகளின் பட்டியல் குறித்த விவரம் வெளிவந்துள்ளது.
இவர்களது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேறி வருவதாக பேசப்பட்டாலும், நடிகர்களின் சம்பளம் ரூ.200 கோடியை சுலபமாகத் தாண்டிக்கொண்டிருக்க, நடிகைகளின் சம்பளம் அதிகபட்சமாக ரூ.40 கோடியில்தான் நிற்கிறது. அதுவும், ஹாலிவுட் பட வாய்ப்புகளால் இந்த அளவிலான சம்பளத்தை அவர்கள் எட்டியுள்ளனர்.
நயன்தாரா
பட்டியலில் பத்தாவது இடத்தில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே பாலிவுட் தேவதைகள்தான்.
தமிழ் திரையுலகில் ‘ஐயா’ படம் மூலம் கால் பதித்தவர் நடிகை நயன்தாரா. இவர், கடைசியாக ‘அன்னபூரணி’ படத்தில் நடித்தார். அது அவரது 75வது படம்.
தொடர்புடைய செய்திகள்
தற்சமயம் தமிழில் ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது.
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஸ்ரீலீலா மட்டுமன்றி நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தனது வீட்டிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும், அப்படி நடத்தினாலும் காலை 11 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவேன், இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டுதான் வருவேன் போன்ற நிபந்தனைகளை நயன்தாரா விதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஒப்பனைப் பொருள்கள், சொத்து முகவை, தயாரிப்பு, முதலீடு, பங்கு வர்த்தகம் என ஆண்டுதோறும் இவரது சொத்து மதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது.
இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடியாக உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் பெறுகிறார். விளம்பர வருவாய்: ரூ.5 கோடி.
ஷ்ரத்தா கபூர்
2010ல் ‘டீன் பட்டி’ படம் மூலம் பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். பிரபாஸின் ‘சாஹோ’ படத்தின் தமிழ் ‘டப்பிங்’ மூலம் கோடம்பாக்கத்துக்கும் வந்துள்ளார். ஒன்பதாவது இடத்தில் உள்ள இவரது சொத்து மதிப்பு ரூ.123 கோடி. ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர வருவாய்: ரூ. 1.6 கோடி.
அலியா பட்
ரன்பீர் கபூரைத் திருமணம் செய்த பிறகு கபூர் குடும்பத்துப் பெண்ணாக மாறிவிட்டார். ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படம் மூலம் ஆஸ்கர் மேடை வரை சென்று திரும்பியுள்ளார்.
எட்டாவது இடத்தில் உள்ள இவரது சொத்து மதிப்பு ரூ.229 கோடி. ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் பெறுகிறார். விளம்பர வருவாய்: ரூ. 2 கோடி.
கத்ரீனா கைஃப்
‘பூம்’ இந்திப் படம் மூலம் முதல் அறிமுகம் அமிதாப் பச்சனுடன்தான். விஜய் சேதுபதியுடன் ‘மேரி கிறிஸ்மஸ்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். சொந்தமாக ஒப்பனைப் பொருள்கள் விற்பனையும் செய்து வருகிறார் கத்ரீனா.
ஏழாவது இடத்தில் ரூ.235 கோடி சொத்துகளுடன் உள்ளார். ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர வருவாய்: ரூ. 6 முதல் ரூ.7 கோடி வரை.
மாதுரி தீட்ஷித்
‘அபோத்’ இந்திப் படம் மூலம் அறிமுகமானவர். பாலிவுட் நடன அரசி எனச் செல்லமாக அழைக்கப்படுபவர். ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என கான்களின் ஜோடியாக பல படங்களில் நடித்தவர்.
என்றும் 16 போல் காட்சியளிக்கும் மாதுரி ஆறாவது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.250 கோடி. ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை. விளம்பர வருவாய்: ரூ.8 கோடி.
அனுஷ்கா ஷர்மா
திருமதி விராட் கோலியாக இந்தியா முழுவதும் தற்போது அறியப்படும் அனுஷ்கா ஷர்மாவின் முதல் படம் ஷாருக்கானுடன் அமைந்தது. சினிமா- கிரிக்கெட் என இரு வருமானங்கள் ஒன்றிணைய ஐந்தாவது இடத்தில் அனுஷ்கா ஷர்மா உள்ளார். இவரது மொத்த வருமானம் ரூ.255 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை. விளம்பர வருவாய்: ரூ. 8 முதல் ரூ.10 கோடி.
கரீனா கபூர் கான்
இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் தமிழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. ‘ஜப் வி மெட்’ (‘கண்டேன் காதலை’), ‘டான்’ (‘பில்லா’), ‘பாடிகார்ட்’ (‘காவலன்’), ‘3 இடியட்ஸ்’ (‘நண்பன்’) உள்ளிட்ட படங்கள் அடங்கும். 24 ஆண்டுகளாக இன்னும் முன்னணி நாயகியாக வலம் வரும் கரீனாவின் சொத்து மதிப்பு ரூ.440 கோடி. நான்காவது இடத்தில் உள்ள இவர், ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.8 முதல் ரூ.18 கோடி வரை. விளம்பர வருவாய்: ரூ.3 முதல் ரூ. 4 கோடி வரை.
தீபிகா படுகோன்
‘ஹவுஸ்ஃபுல்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘கோச்சடையான்’, ‘பதான்’, ‘ஜவான்’ என தமிழிலும் நடித்துள்ள தீபிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நயன்தாரா போலவே ஒப்பனைப் பொருள்கள், பங்கு வர்த்தகம், அயல்நாட்டு முதலீடுகள் உட்பட தீபிகா படுகோன் கைவசம் ஏராளமான தொழில்கள் உள்ளன.
மூன்றாவது இடத்தில் உள்ள தீபிகாவின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி. ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.15 முதல் ரூ.30 கோடி வரை. விளம்பர வருவாய்: ரூ. 7 முதல் ரூ.10 கோடி.
பிரியங்கா சோப்ரா
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக தற்போது இடம் பிடித்திருக்கும் நடிகை. ஹாலிவுட் பட வாய்ப்பு இவரது சம்பளத்தை ரூ.40 கோடிக்கு உயர்த்தியுள்ளது. 2002ஆம் ஆண்டு விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானவர்.
இரண்டாம் இடத்தில் உள்ள இவரது சொத்து மதிப்பு ரூ.620 கோடி. ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.15 முதல் ரூ.40 கோடி வரை. விளம்பர வருவாய்: ரூ.5 கோடி.
ஐஸ்வர்யா ராய் பச்சன்
இந்தியாவின் பணக்கார நடிகை பட்டியலில் முதலிடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். 1994ஆம் ஆண்டு உலக அழகியாக இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முதல் பெண். 1997ல் மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் மூலம் அறிமுகமானவர்.
தொடர்ந்து தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’, ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ என தமிழுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நீண்ட பந்தம் உண்டு.
ஐநாவின் நல்லெண்ணத் தூதர் துவங்கி அயல்நாட்டு பங்குதாரர், முதலீடு, பங்கு வர்த்தகம், தொழில்கள் என ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு ரூ.800 கோடியாக முதலிடத்தில் உச்சம் தொட்டுள்ளது. ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.10 கோடி. விளம்பர வருவாய்: ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை.