தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனது துபாய் வாழ்க்கை குறித்துப் பேசி பலரையும் உருகவைத்த விஜய் சேதுபதி

2 mins read
3fad77f8-2481-4108-8e19-504ba84a77c8
‘மகாராஜா’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் ‘மகாராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அண்மையில் அறிவித்திருந்தனர்.

அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தைப் பிரபலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசினார்.

“50 படங்களில் நடித்துவிட்டேன். எனினும், பல படங்களுக்கு இன்னும் முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை. காசோலைகூட பணமின்றி திரும்பி வந்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் படமெடுக்க ஆர்வம் காட்டுவதை நான் வரவேற்கிறேன்.

“எனக்கு படம் இயக்குவதற்கும் ஆர்வமுள்ளது, விரைவில் படம் இயக்குவேன்,” என்று கூறியவர், தன்னுடைய திரைப் பயணத்தில் வெற்றி, தோல்வி அனைத்தையும் சமமாகவே எடுத்துக் கொள்வதாகவும் பாராட்டுகள், விமர்சனங்களையும் அவ்வாறே பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துபாயில் உள்ள மிக உயரமான புர்ஜ் கலீஃபாவில் ‘மகாராஜா’ படத்தின் சுவரொட்டி திரையிடப்பட்டு ஜொலித்ததாகக் கூறிய விஜய் சேதுபதி, சினிமாவில் எல்லோரிடம் இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதாகக் கூறினார்.

நடிகனாகும் முன்னர் துபாயில் வேலை பார்த்த அனுபவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார். இந்தக் காணொளி இப்போது பலரையும் உருக வைத்துள்ளது.

“இது நான் சொல்லிச் சொல்லி சலித்துப்போன கதையாக இருந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். நான் ஒரு நிறுவனத்தில் ரூ.3,500 சம்பளத்தில் கணக்காளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

“அப்போது துபாயில் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் தருவார்கள் என்றும் என் நண்பர் ஒருவர் கூறினார்.

“ஏகப்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு, நாம் துபாயில் பெரிய ஆளாகப் போகிறோம் என்ற கனவுகளுடன் சென்றேன். ஆனால், நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

“20 வயதில் ஏதாவது சாதித்துவிட மாட்டோமா, குடும்பத்தை எப்படியாவது மேன்மைக்கு கொண்டு வந்துவிட மாட்டோமா என மாதக் கணக்கில் நான் ஏங்கி இருக்கிறேன்.

“அங்கு ஒரு இயந்திரம் இருக்கும். அதில் காசு போட்டால் குளிர்பானம் கிடைக்கும். ஒரு திர்ஹம் வைத்துக்கொண்டு இதைச் செலவு செய்யலாமா? வேண்டாமா? என பலமுறை யோசித்துள்ளேன்,” என்றார் விஜய் சேதுபதி.

அங்கு கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. வியாழக்கிழமை என்றால் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பிரியாணி சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, துணி துவைத்து காயப்போடுவோம் என்று தொடர்ந்து பேசியவர், “ரூம் சுத்தம் செய்வது, சமைப்பது, குளியலறையை கழுவுவது இவ்வளவுதான் வாழ்க்கை. இதை தாண்டி கனவு காணக் கூட நேரம் இருக்காது.

“இப்போது 10 ஆண்டுகள் கழித்து திரும்பி அந்த இடத்தை பார்க்கும்போது, நான் அங்கு ஏக்கத்தோட சுற்றிய அந்த ஞாபகங்கள்தான் எனது நினைவுக்கு வந்ததே தவிர, மற்ற எதுவும் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை,” என்று விஜய் சேதுபதி நினைவு கூர்ந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்