தனது திரையுலக அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டு இருப்பதாகக் கூறியுள்ள நடிகை நக்ஷா சரண், கோலிவுட், டோலிவுட் என பிரித்துப் பார்க்காமல் பல மொழிப் படங்களிலும் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்.
“என்னால் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியும். மலையாளமும் கொஞ்சம் தெரியும். மொழிகளைத் தாண்டிய நடிகையாகப் பெயர் வாங்கவேண்டும் என்பதே தனது லட்சியம்,” என்பவர், கதையும் பாத்திரமும் பிடித்திருந்தால் வில்லியாக நடிக்கத் தயங்கமாட்டேன் என்று சொல்கிறார் நக்ஷா சரண்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடிப்பில் வெளியான ‘சாமானியன்’ படத்தில் அவருடைய மகளாக துறுதுறு நடிப்பில் மின்னிய நடிகைதான் நக்ஷா சரண். தெளிவான தமிழ் உச்சரிப்பு, சினிமாவைப் பற்றிய புரிதலுடன் மிளிர்கிறார் நக்ஷா சரண்.
சென்னைவாசியான இவர், பட்டப் படிப்பை முடித்ததும் ‘மார்கழி திங்கள்’, ‘சாமானியன்’ என இரு படங்களில் குறுகிய காலத்திற்குள் நடித்துள்ளார்.
“சாமானியன் கதையைக் கேட்கும்போது நடிப்பில் சிறந்த ஜாம்பவானுடன் நடிக்கப் போகிறோம் என்ற ஆர்வம் அதிகமானது. ஏனெனில், ராமராஜன் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர்.
“அவர் மீண்டும் திரையுலகில் தோன்றும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது என்னுள் அளவில்லாத மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.
“படப்பிடிப்பின்போது எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பதற்றம் இருந்தது உண்மைதான். ஆனால், ராமராஜன் என்னுடன் பழகும் விதம் எனக்குள் இருந்த அழுத்தத்தை முழுதாக குறைத்துவிட்டது,” என்று கூறியுள்ள நக்ஷா சரண், “அந்த அளவுக்கு மிக எளிமையாகப் பழகுபவர் ராமராஜன். ஒரு பெரிய நட்சத்திரம் என்ற பந்தா எதுவும் அவரிடம் இருக்காது.
“ஒரு உண்மையான அப்பாவிடம் ஒரு மகள் எப்படி தனது உணர்வுகளை வெளிப்படுத்துவாரோ அதேபோன்றுதான் நானும் அவரிடம் திரையில் மட்டுமன்றி, நிஜத்திலும் நடந்துகொண்டேன். மிகப் பெரிய உயரத்துக்குப் போனாலும் எளிமையை எப்போதும் எப்படி கடைப்பிடிப்பது என்பதை ராமராஜனிடம் கற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
“சாமானியன் படம் நான் நடித்த முதல் படம் என்பதால் முதன்முறையாக கேமரா முன் நின்றது மிகப்பெரும் சவாலாக இருந்தது. அது சவால் மட்டுமல்ல, மறக்க முடியாத தருணமும் கூட. கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என இரு தோற்றங்களில் நடித்துள்ளேன்,” என்கிறார் நக்ஷா.
மற்றொரு படமான ‘மார்கழி திங்கள்’ படத்தில் நடித்ததை எனது அதிர்ஷ்டமாகவே நினைக்கிறேன். பாரதிராஜா, இளையராஜா என இரு ஜாம்பவான்கள் இணைந்த படம்.
‘சாமானியன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா, மனோஜ் இருவரும் பாராட்டினார்கள்.
பாரதிராஜாவுடன் நடித்தது வாழ்நாளில் மறக்கமுடியாது. நான் நன்றாக நடிப்பதாக அவருடைய எல்லா பேட்டியிலும் சொல்லியிருந்தார். பாரதிராஜா நடிப்பதற்கு என நிறைய குறிப்புகளை எனக்குத் தந்தார்.
தமிழ்ப் பெண் நடிக்க வருவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பாரதிராஜா சொன்னதை பெருமையாகப் பார்க்கிறேன்.
‘பைக் டாக்சி’, விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’, இவை தவிர மலையாளப் படத்திலும் நடித்து வருகிறேன் என்கிறார் நக்ஷா.
எதிர்காலத்தில் இதுபோன்ற பாத்திரங்கள்தான் செய்யவேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால் ஒரே மாதிரியாக இல்லாமல், புதிது புதிதாக செய்ய ஆசைப்படுகிறேன்.
வித்தியாசமான படங்களாகத் தேர்வு செய்து நடிக்கவேண்டும் என நினைக்கிறேன்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவேண்டும். அவருடைய ஒவ்வொரு படத்தையும் ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதைவிட வாழ்க்கையில் எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்கமுடியாது என நினைக்கிறேன். மணி எனது கனவு இயக்குநர்.
நான் பாடகி என்பது பலருக்குத் தெரியாது. முறைப்படி இசையைக் கற்றுக்கொண்டுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில்தான் படித்தேன். பாட வாய்ப்பு கிடைத்தால் தவறவிடமாட்டேன் என்கிறார் நக்ஷா சரண்.

