விஜய் ஆண்டனியை வைத்து விஜய் மில்டன் கதையெழுதி, இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
படம் குறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் மில்டன், “விஜய் ஆண்டனிக்கு ஏன் மழை பிடிக்காது என்ற கேள்விக்கு என்னால் எளிமையாக பதில் சொல்லிவிட முடியும். ஆனால், அப்படி பதில் சொல்லமாட்டேன். ஒருவரைப் பற்றி மேலோட்டமாகத்தான் நமக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் பழகினால்தான் அவர்களது பல்வேறு குணமும் பிடிபடும்.
“நாயகனுக்கு ஏன் மழை பிடிக்காது என்ற இந்தக் கேள்வி எப்படி பார்வையாளர்கள் மத்தியில் உள்ளதோ, அதேபோல் படத்தில் இடம்பெறும் மற்ற பாத்திரங்களிடமும் இருக்கும். அந்தக் கேள்விக்கான தேடல்தான் படம்,” என்றார்.
விஜய் ஆண்டனி என்னுடைய நீண்ட நாள் நண்பர் என்று கூறியுள்ள இயக்குநர் விஜய் மில்டன், “விஜய் ஆண்டனியிடம் எனக்குப் பிடித்த விஷயம் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தருவதுதான். தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடமாட்டார். கதை சொன்னதும் சில விளக்கங்களைக் கேட்பார். அதன்பிறகு தேவையில்லாத கேள்விகள் கேட்கமாட்டார்.
“பட நாயகி மேகா ஆகாஷ் சிறந்த நடிகை. திரையில் அவருடைய அழகு அள்ளும். தமிழ் பேசக்கூடிய எளிமையான பெண். அவர் ஏன் இன்னும் உயரத்துக்கு வரவில்லை என்பது ஆச்சர்யம்தான். முன்னணி நடிகைக்கான எல்லா தகுதியும் உடையவர்,” என்று கூறினார்.
“கெட்டவன் சாகக் கூடாது, கெட்டது சாகவேண்டும் என்பதுதான் படத்தின் மையக் கரு. கெட்டவன் என்பவன் யார்? வானத்தில் இருந்து குதித்தவன் கிடையாதே? அவனும் சக மனிதன். அவனைக் கொல்வதால் மாற்றம் வராது. மக்கள் தொகையில் ஒரு எண்ணிக்கைதான் குறையும். அவனுக்குள் இருக்கும் கெட்டதைக் கொன்றுவிட்டால் ஒரு உயிர் பிழைக்கும். இதுதான் படத்தின் கதை,” என்கிறார் விஜய் மில்டன்.