நான் நடித்த படங்களின் எண்ணிக்கையில் பெருமை கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. மாறாக முத்தான, தரமான படங்களில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை ரேவதி ஷர்மா.
இயற்கை அழகியாக, பக்கத்து வீட்டுப் பெண்ணின் தோற்றத்துடன் காணப்படும் ரேவதி ஷர்மா, ‘அருவி’ அதிதி பாலனின் மாமா மகள் ஆவார்.
‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘கருடன்’ படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை கலைத்துறையில் சிறந்த நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் என் கனவு. அதனால்தான் நடிப்பதற்கு அவசரம்காட்டாமல் படிப்பையும் பாதியில் நிறுத்திவிடாமல் படித்து முடித்துவிட்டேன்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டுள்ளன. கதைகள் வலுவாக உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
‘கருடன்’ படத்தில் நான் விண்ணரசி பாத்திரத்தில் நடித்திருந்தேன். ஒரு அப்பாவி கிராமத்துப் பெண், குடும்பம், தினசரி வாழ்க்கை என்று எப்போதும் இருப்பாள்.
‘கருடன்’ படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். படம் முழுவதும் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி என பல அனுபவமுள்ள நடிகர்களின் நடிப்பைக் காணலாம்.
இயக்குநர் துரை செந்தில்குமார் வேலை வாங்கும் விதமே வித்தியாசமாக இருந்தது. மிகவும் தெளிவாக எடுத்துச்சொல்லி நம்மை நடிக்கவைப்பார் என்று கூறும் ரேவதி ஷர்மா, படத்தில் எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான் இருந்தது. சசிகுமார், சமுத்திரக்கனியுடன் எனக்கு காட்சிகள் இல்லை. இருந்திருந்தால், எனக்கு இன்னும் நிறைய பாடம் கிடைத்திருக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சூரி எப்போதும் ஏதாவது கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், எந்தக் கேள்வியும் கடந்து போகக்கூடியதாக இருக்காது.
முதல் படமும் இரண்டாவது படமும் மிகப்பெரிய படங்களாக அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் என்று சொல்லும் ரேவதி ஷர்மா, “கவர்ச்சிக்கு என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எல்லை இருக்கும். அதேபோல் நானும் ஒரு எல்லை வைத்துள்ளேன்.
“நடிப்பதற்கு, குறிப்பாக முகபாவங்கள், கண்களுக்கான பயிற்சி, பொது இடங்களில் - சினிமா நிகழ்வுகளில் எப்படி பேசவேண்டும் என்ற பயிற்சிகளை அதிதி பாலன் நிறைய சொல்லிக் கொடுத்துள்ளார்,” என்று கூறியுள்ளார் ரேவதி ஷர்மா.
“ரீமா கல்லிங்கல், சாய் பல்லவி, பார்வதி ஆகிய மூன்று நடிகைகளும் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாகவே எனக்குத் தோன்றும். இவர்கள் நடிப்பது போன்ற பாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்கும் ஆசை உள்ளது,” என்று ரேவதி ஷர்மா கூறியுள்ளார்.