விஜய் நடிக்கும் ‘கோட்’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ ஆகிய இரு படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்விரு படங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கோட்’ படத்தின் இறுதிக் காட்சி தொடர்பான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்கும் லைட்மேன்கள் முதல், கதாநாயகன் வரை அனைவருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
ஆனால் அந்தக் கெடுபிடிகளையும் மீறி, ‘கோட்’ படம் தொடர்பான தகவல் கசிந்திருப்பது இயக்கநர் வெங்கட் பிரபுவுக்கும், விஜய்க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த படத்தில் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய்.
அவரை திரையில் இளமையாக காட்ட அமெரிக்காவில் தனி தொழில்நுட்பக்குழு உருவாக்கப்பட்டு இருந்ததாம். இதற்காக அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பினார் விஜய்.
சரி, இறுதிக் காட்சி தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
இந்த படத்துக்காக இரு விஜய்கள் திரையில் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி உச்சபட்ச விறுவிறுப்புடன் படமாக்கியுள்ளதாம்.
கதைப்படி விஜய்யுடன் நேரடியாக மோதும் முதன்மை வில்லன் ‘மைக்’ மோகன் தான். அவருக்கும் விஜய்க்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது பாடலை வெளியிட உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே இப்படத்தில் காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த் இடம் பெறும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று திரை உலகைச் சேர்ந்தவர்களே இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் விவரங்கள் கேட்டு ஒருவழியாக்கி விட்டனராம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜயகாந்த் இப்படத்தில் நேரடியாக நடித்தது போன்ற காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் ஏறக்குறைய ஒன்றரை நிமிடங்களுக்கு இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விஜய்காந்தின் மகன் விஜய் பிரபாகரன் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கதையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில்தான் விஜயகாந்த் நடித்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இரண்டாவது படமான ‘செந்தூரப்பாண்டியில்’ இணைந்து நடித்தார் விஜயகாந்த். தற்போது விஜய் நடிப்பில் அவரது கடைசி படத்துக்கு முந்தைய படத்தில்(’கோட்’) விஜயகாந்த் சம்பந்தமான காட்சி இடம் பெற்றுள்ளது.
இப்படம் குறித்து மேலும் சில சுவாரசிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய நேரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு அவற்றை வெளியிடுவாராம்.
“கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடித்து வெளியான ஏராளமான திரைபடங்கள் வசூல் ரீதியில் பெரும் சாதனைகளை படைத்துள்ளன. தனது கடைசி படம் வரை இந்நிலை நீடிக்க வேண்டும் என்பதை மட்டுமே விஜய் தீவிரமாக யோசித்து வருகிறார். அதற்கு ஏற்ற கதைகளைத்தான் அவர் தேர்வு செய்கிறார்.
“முழுநேர அரசியலில் ஈடுபட்டால் திரை உலக பணிகளை சரிவர செய்ய இயலாது என்று நினைக்கிறார் விஜய். ஆனால் இந்த விசயத்தில் காலஞ்சென்ற முதல்வர் எம்.ஜி.ஆரை அவர் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று கோடம்பாக்க விவரப்புள்ளிகள் தெரிவித்துள்ளனர். நெருக்கமான பலர் இவ்வாறு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனராம். அவை அனைத்தையுமே விஜய் பரிசீலிக்கிறாராம்.

