தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்பீரமாக அரியணையில் அமர்ந்த மகாராஜா

3 mins read
46b0df84-e849-4121-bc69-47b83387379c
‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி தனது 50வது படமான ‘மகாராஜா’வில் தனது அசுரத்தனமான நடிப்பால் பலரின் கவனத்தை ஈர்த்து நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிறார்.

சிறு சிறு வேடங்களில் நடித்து வில்லன், நாயகன், பாலிவுட் என வளர்ந்த விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் மகாராஜாவை இயக்கி உள்ளார்.

கதைநாயகன் மகாராஜா (விஜய் சேதுபதி) தன் வீட்டில் வைத்திருந்த லட்சுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். லட்சுமி என்றால் செல்வம். அப்படி எந்த செல்வத்தைத் தொலைத்தாய் என காவல் அதிகாரிகளிலிருந்து கைதாகியிருக்கும் திருடன் வரை அனைவரும் கேட்கிறார்கள். மகாராஜா தான் தொலைத்த அந்தப் பொருளைப் பற்றிச் சொல்கிறார்.

அதைக்கேட்டு மொத்த காவல்நிலையமுமே கோபமடைகிறது. மகாராஜாவை அடித்து விரட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில், காவல் ஆய்வாளரிடம் என் பொருளைக் கண்டுபிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்சம் தருவதாகக் கூறுகிறார்.

ஐநூறு ரூபாய் விலைகூட இல்லாத திருடுபோன பொருளை இவ்வளவு தொகை கொடுத்து மீட்க இவன் ஏன் போராடுகிறான் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். திருடுபோன பொருளுக்குள் வேறு ஏதோ இருக்கிறது என காவல்துறை அப்பொருளை மீட்க தீவிரம் காட்டுகின்றனர்.

இதற்கிடையில் பசுத்தோல் போர்த்திய புலிபோல் வாழ்ந்துவரும் செல்வம் (அனுராக் காஷ்யப்) கொலை, கொள்ளைகளைச் செய்து வருகிறார்.

ஒரு நாள் காவலர்களிடம் சிக்கிக்கொண்ட செல்வம் சிக்க வைத்தது சவர தொழிலாளி மகாராஜா (விஜய் சேதுபதி) தான் என்று தவறாக புரிந்துகொண்டு, சிறை சென்று பதினைந்து ஆண்டுகள் கழித்து வந்து மகாராஜாவை கொலை செய்ய நினைக்கிறார்.

இந்த முயற்சியின்போது எதிர்பாராதவிதமாக மகாராஜாவின் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். தன் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார் மகாராஜா.

விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் லட்சுமியை காணோம் என்று புகார் கொடுத்துவிட்டு அங்கேயே இரவு பகலாக காவலர்களிடம் வசவு வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் இருக்கும்போது ‘எதுக்கு இந்த மனுஷன் இப்படி இருக்காரு’ என்று நாம் நினைக்கும் நேரத்தில் ஒரு திருப்பு முனை வைத்திருக்கிறார் இயக்குநர். இப்படி பல திருப்பங்கள் இரண்டாம் பாதியில் இருக்கின்றன.

ஒரு படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பாகிய எடிட்டிங் மிக முக்கியமானது என்பார்கள். எவ்வளவுதான் இயக்குநர் பிரமாதமாகப் படத்தை எடுத்திருந்தாலும் படத்தின் வெற்றி தோல்வி என்பது எடிட்டரின் கையில்தான் முடிவாகிறது என்ற கருத்து உள்ளது. இந்தக் கருத்தை உண்மையாக்கும் விதமாக மிகச் சிறந்த படத்தொகுப்பு நுட்பங்களைக் கொண்ட படமாக வந்துள்ளது ‘மகா ராஜா’.

படம் நல்ல ஆக்‌ஷன் கலந்த திரில்லர் அனுபத்தைத் தருகிறது. இந்த அனுபவம் கிடைப்பதில் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, அனல் அரசு மாஸ்டரின் சண்டை பயிற்சி, அஜனீஷ் லோகநாதின் இசை, இந்த மூவரின் பங்களிப்பும் முக்கியமானது.

சாதாரணமாக படத்தில் நாயகன் அழும்போது படம் பார்க்கும் ரசிகர்களும் அழுவார்கள். ஆனால், ‘மகாராஜா’ படத்தில் வில்லனாக நடிக்கும் அனுராக் காஷ்யப் அழும்போது ரசிகர்கள் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது. மிரட்டலான நடிப்பில் அசத்தி இருக்கிறார் இந்த நடிப்பு அரக்கன். சிங்கம் புலியை வித்தியாசமாகக் காட்டி இருக்கிறார் இயக்குநர்.

பல நல்ல திரைப்படங்களில் நடித்தாலும் 96 படத்திற்குப் பின் கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கு வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. மகாராஜா அவரின் 50வது திரைப்படம். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இதுவே சிறந்த திரைப்படம் எனத் தோன்றுகிறது.

நடிப்பில் தான் ஒரு ‘மகாராஜா’ என்பதை காட்சிக்குக் காட்சி நிரூபித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அடிபட்ட ஒரு காதில் கட்டு போட்டுக்கொண்டு தன் மகளுக்கான நீதியைத் தேடி அலையும்போதும் காவல் நிலையத்தில் அவமானப்படும்போதும் கமல், விக்ரமிற்கு அடுத்து நடிப்பில் விஜய் சேதுபதிதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

காதில் வெட்டுக்காயத்துடன் நரைதாடியுடன் பழிவாங்கத் துடிக்கும் வெறியை தன் பக்குவமான நடிப்பால் மாறுப்பட்ட திரைக்கதையில் முழு உழைப்பையும் தந்து தனது ஐம்பதாவது படத்தை சிறந்த படமாக தந்துள்ளார் விஜய் சேதுபதி. திரை விமர்சனம்: இந்து, தினமணி.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திநடிகர்