தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர்களின் மனத்தை உருக்கும் ‘மகாராஜா’

2 mins read
307b63a9-dc17-4337-b909-be8261e224bb
‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘மகாராஜா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த அனைவருக்கும் மனதில் உதிக்கும் ஒரே கேள்வி, “யார் அந்த லக்‌ஷ்மி?” என்பதே.

வியாழக்கிழமை (ஜூன் 13) உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், இக்கேள்விக்குத் தரமாக பதிலளித்துள்ளது என்றே கூற வேண்டும்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான இப்படத்தில் அனுராக் கஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், ‘நட்டி’ நடராஜன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், பாரதிராஜா என பலர் நடித்துள்ளதோடு ‘பாச்சிலர்’ திரைப்படப் புகழ் திவ்யா பாரதியும் சிறப்புக் காட்சியில் இடம்பெறுகிறார்.

இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி அவருக்கென்றே உரித்தான யதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இக்கதாபாத்திரத்தில் அவரது நடிப்புத்திறன் சிறப்பாக வெளிப்பட்டது. பதின்ம வயதுச் சிறுமியின் தந்தையாக அவரது நடிப்பு நம்பகமாக இருந்தது.

நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்தாலும், விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நேமிதாசின் நடிப்பு ரசிகர்களின் மனதை உருக்கியது. 

மூவிஸ் சிங்கப்பூர், யூஐஈ மூவீஸ், கார்னிவல் திரையரங்கம் வியாழக்கிழமை இணைந்து ஏற்பாடு செய்த சிறப்புக் காட்சியில் திரைப்படத்தைக் கண்டு ரசித்த கெளதம சித்தார்த், 25, “மகளாக நடித்த சச்சனா, சிங்கம்புலி, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று மெதுவாக இருந்தாலும், சிறிது நேரத்தில் கதையில் விறுவிறுப்பு ஏற்பட்டது,” என்றார்.  

இத்திரைப்படத்தின் சிறப்பம்சம், நடிகர்களின் நடிப்பன்று. மாறாக, இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனின் திரைக்கதையே இப்படத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. 

‘குரங்கு பொம்மை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘மகாராஜா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

எளிமையான கதை அம்சத்தைக் கொண்டிருந்தாலும், அவர் பயன்படுத்தியுள்ள திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைகிறது.

முற்பாதியில் நகைச்சுவை, பிற்பாதியில் உணர்ச்சி பொங்கும் காட்சிகள் என முழுமையான திரைப்படமாக ‘மகாராஜா’ விளங்குகிறது.

“இத்திரைப்படத்தின் திரைக்கதை, ‘பிளேக் மிரர்’ என்ற ஆங்கில இணையத் தொடரின் சாயலைக் கொண்டிருப்பது சிறப்பாக இருந்தது. விஜய் சேதுபதி நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல படத்தில் நடித்துள்ளார்,” என்று ஷேக் முகமது, 22, கூறினார்.

பிலோமின் ராஜின் ஒளிப்பதிவு, கொட்டடி பவன் கல்யாணின் படத்தொகுப்பு இவ்விரண்டும் படத்தைத் தொய்வடையவிடாமல் கடைசிவரை சுவாரசியமாக வைத்திருக்கின்றன.

அஜனீஷ் லோக்நாத்தின் இசையமைப்பிலான இத்திரைப்படத்தில் ஒரேயொரு பாடல் இடம்பெறுகிறது. கதையோட்டத்துடன் அப்பாடல் வருவதால் அது தனித்து தெரியவில்லை. குறிப்பாக, பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது.

நல்ல பின்னணி இசைக்கான அடையாளங்களின் ஒன்று, அது திரைக்காட்சிகளுடன் ஒன்றிணைந்துவிடுவதே. அதை அஜனீஷ் சிறப்பாகச் செய்துள்ளார்.

அனல் அரசின் சண்டைக் காட்சிகள் சற்றே வன்முறை நிறைந்ததாக இருந்தாலும், அவற்றைக் கதைக்களம் நியாயப்படுத்துகிறது. 

பல திருப்பங்களுடன், உணர்ச்சிகளுடன், திறன்மிகு திரைக்கதையுடன் சமூகத்திற்குத் தேவையான கருத்தை இத்திரைப்படம் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்