தோல்வி என்றாலே எல்லாருக்குமே ஒருவித பயம் ஏற்படுவது இயல்புதான் என்றும் தோல்வியை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை என்றும் நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.
‘கருடன்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெற்றி விழா என்று குறிப்பிடாமல், நன்றி தெரிவிக்கும் விழா என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்றார்.
“நான் இப்படிச் சொல்ல காரணம் உள்ளது. எப்போதுமே வெற்றி விழா என்று வைத்தால், அப்படம் தோல்விப்படம் என்றும் ஓடாத படத்திற்குத்தான் ‘சக்ஸஸ் மீட்’ வைப்பார்கள் என்றும் ஒரு பார்வை இருக்கிறது.
“நாம் முதலில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் தோல்வியை ஒப்புக் கொண்டால்தான், அடுத்த படத்தில் நம்மால் வெற்றிபெற முடியும்.
“தோல்விக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்வார்கள். கருடன் படத்திற்கும் அது நடந்தது.
ஆனால், இந்தப்படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவர்தான் காரணம் என்பது நன்றாகத் தெரிந்தது.
அவர் படத்தின் தயாரிப்பாளர்தான். காரணம், தொடக்கத்தில் இருந்தே அவர் இந்தப்படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். முன்னதாக இப்படத்தை ஓடிடிக்கு விற்க முடியாத சூழ்நிலை இருந்தது.
“அப்போது தயாரிப்பாளர் குமார் மிகவும் சிரமப்பட்டார். நல்ல படங்கள் வெளியாகும்போது, ரசிகர்கள் நிச்சயமாக திரையரங்குகளுக்கு வந்து பார்ப்பார்கள் என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று.
தொடர்புடைய செய்திகள்
“தயாரிப்பாளருக்கு என்னுடைய நன்றி. சூரிக்காகத்தான் இப்படத்தில் நடிக்க வந்தேன். என்னால் இயன்ற நல்லதைச் செய்வதே என் நோக்கம்.
“ஆனால், இப்படத்தில் நடித்ததன் மூலம் நான் எடுத்த முடிவு எனக்கு மிக நல்லதாகிவிட்டது. சூரியை இனி ‘பரோட்டா சூரி’ என்று யாரும் அழைக்க மாட்டார்கள்.
“அவர் கதை நாயகனாக தனது திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்,” என்றார் சசிகுமார்.

