தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த வரம்: ரோஷினி

2 mins read
272354d4-9795-4468-b3e1-a13db5637224
ரோஷினி. - படம்: ஊடகம்

`பாரதி கண்ணம்மா’ தொலைக்காட்சித் தொடரில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன், இப்போது வெள்ளித்திரைக்கு வந்துவிட்டார்.

சின்னத்திரையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அவற்றுள் ‘கருடன்’ படமும் ஒன்று.

அதில், அங்கயற்கண்ணி கதாபாத்திரம் தமக்கு மிகுந்த மனநிறைவு அளித்திருப்பதாகச் சொல்கிறார் ரோஷினி.

தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த ரோஷினி, பின்னர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிடைத்ததுதான் ‘பாரதி கண்ணம்மா’ சின்னத்திரை தொடர் வாய்ப்பு.

“அந்தச் சின்னத்திரை தொடரில் பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் விதமாகக் கதை அமைந்திருந்தது. அதனால்தான் ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

“நம்மால் நடிக்க இயலுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், எனக்குள் இருந்த தயக்கத்தைப் போக்கியது அத்தொடரின் இயக்குநர் பிரவீன்தான்.

“என்னை வைத்து முதலில் சில காட்சிகளை எடுக்க அவர் பட்ட சிரமம் இப்போதும் நினைவில் இருக்கிறது. படிப்படியாக நடிப்பு சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

“அடி வாங்கும் காட்சிகளில் நிஜமாகவே அடி வாங்கினேன். என்னைப் பற்றி கிண்டல் அடிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் ‘மீம்ஸ்’ வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் இயல்பான கேலி, கிண்டல்கள் என்று ஜாலியாக எடுத்துக்கொண்டேன்.

“திரைத்துறையில் நாம் நினைப்பதுபோல் எல்லாம் நடந்துவிடாது. எனவே, நம்முடைய வேலையை சரியாகச் செய்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். நமது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படுவது தேவையற்றது.

“தொடக்கத்தில் இப்படி நினைத்துதான் வருத்தத்துக்கு ஆளாகினேன். நேரத்தையும் வீணடித்தேன்.

“கருடன்’ படப்பிடிப்பின்போது எப்போதுமே பதற்றத்துடன்தான் இருந்தேன். உடன் நடித்த பல பேர் மூத்த கலைஞர்கள் என்பதால் நாம் சரியாக நடிக்க வேண்டும் என்று நினைத்து மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

“நான் சிறு வயதில் திரையில் பார்த்து ரசித்தவர்களுடன் இணைந்து நடிப்பது அற்புதமான அனுபவம். அதை எனக்குக் கிடைத்த நல்ல வரமாகக் கருதுகிறேன்.

“படம் வெளிவந்த பிறகு எல்லோருமே எனது நடிப்பு நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பிறகுதான் மனம் நிம்மதி அடைந்தது.

தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்து பலரும் கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திரைப்பட நடிகையாக தனது பயணம் எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே திட்டங்களை வகுக்க முடியும் என்கிறார்.

“தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். அவற்றில் ஒன்று நல்ல குடும்பக் கதை. எனது மனதுக்கு நெருக்கமான கதை என்றும் கூறலாம். அந்தப் படத்தின் வெளியீட்டுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

“சின்னத்திரையில் மீண்டும் நடிப்பீர்களா என்றும் சிலர் கேட்கிறார்கள். எனக்கு பாலசந்தர் சாருடைய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்களை மிகவும் பிடிக்கும். அதுபோன்ற சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தால் எந்தவிதத் தயக்கமும் இன்றி நிச்சயம் நடிப்பேன்,” என்கிறார் ரோஷினி.

குறிப்புச் சொற்கள்