சினிமா, குறும்படங்களில் நடித்து முத்திரை பதித்து வருபவர் திருச்சியைச் சேர்ந்த சரண்யா ரவிச்சந்திரன். இவர் இதுவரை 130 குறும்படங்கள், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
‘இறைவி’ நான் நடித்த முதல்படமாக இருந்தாலும், ‘காதலும் கடந்து போகும்’ படம் முதலில் வெளிவந்தது. ‘ரெக்க’, ‘சீறு’, ‘ஜெயில்’, ‘பைரி’ உள்ளிட்ட படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.
“நடிக்கத் துவங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடித்தால் வாழ்க்கை மாறிவிடும் என நினைத்தேன். அதுபோல் இன்னும் எந்த மாற்றமும் வரவில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் அது நடக்கும் என நம்புகிறேன் என்கிறார் சரண்யா.
“வாழ்க்கையில் சினிமாவும் ஒரு பகுதிதான் எனப் புரிகிறது. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியது உள்ளது. என்ன நடக்கவேண்டுமோ அது நடக்கும். பல அனுபவங்களையும் சினிமா கற்றுக்கொடுத்துள்ளது,” என்று கூறுபவர், சிலர் திரைப்படங்களில் என்னைப் பார்த்து ‘நம்மவீட்டு பொண்ணு மாதிரி உள்ளார்’ எனக் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.
“நான் திரைத்துறைக்குச் செல்கிறேன் என்றதும் என் அம்மா பயந்தார். அப்பாதான் உற்சாகப்படுத்தினார். சில படங்களில் பாராட்டுகளைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அம்மாவும் நடிப்பில் தொடர்வதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
‘இந்தியன் 2’, ‘டீசல்’, ‘சண்டகாரன்’, ‘லைன்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. ரஜினிகாந்த் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்கவேண்டும். இயக்குநர்கள் மணி ரத்தினம், வெற்றிமாறன் படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது.
ஒருபோதும் தாழ்வு மனப்பான்மை கூடாது. புத்தகங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் என்ற நம்பிக்கையுள்ளதால், தொடர்ந்து புத்தகங்களைப் படித்து வருகிறேன் என்கிறார் சரண்யா ரவிச்சந்திரன்.