விதார்த், சுவேதா டோரத்தி இணைந்து நடித்துள்ள படம் ‘லாந்தர்’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பவர்கள், அது பிடிக்கவில்லை என்றால் மௌனம் காக்க வேண்டும் என்றும் அந்தப் படத்தைப் பார்க்க திரையரங்குக்குப் போக வேண்டாம் என்றும் யாரிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
“ஏனென்றால், ஒரு படம் எடுப்பதற்கு எத்தனை பேர் உழைக்கிறார்கள், எப்படியெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
“படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இவையெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும் திரைப்படத் துறையில் நீடிக்கிறார்கள் என்றால் அத்தொழில் மீதான பக்திதான் காரணம்.
“பலரின் கடினமான உழைப்பில் உருவாகும் படங்கள் குறித்து ஒரேயொரு கைப்பேசி குறுந்தகவல் மூலம் விமர்சனம் செய்வதால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
“உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருந்துவிடுங்கள். மற்றவர்கள் படம் பார்க்கட்டும்.
“திரைப்படங்களைப் பார்க்கச் செலவழிக்கும் 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப்போவதில்லை. ஆனால், நீங்கள் படம் பார்ப்பதால் பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதிற் கொள்ளுங்கள்.