மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு பயணம் மேற்கொண்டபோது, தன் மீது மிகுந்த அபிமானம் கொண்ட ரசிகையைச் சந்தித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் மோகன்.
அப்போது அந்த ரசிகை கூறியதைக் கேட்டு, தாம் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, 40 வயதுள்ள ஒரு பெண்மணி என்னை நெருங்கி தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“நான் உங்களுடைய தீவிர ரசிகை என்று அவர் என்னிடம் கூறியபோது அவருடன் வந்திருந்த அவரது மகன் ஏதோ முணுமுணுக்க, அந்தப் பெண்மணி தலையசைத்து அதை ஆமோதித்தார்.
“பின்னர் தம் கழுத்தில் இருந்த தாலியை அவர் எடுத்துக் காண்பித்தபோது அதில் ஒரு லாக்கெட் இருந்தது. அதை திறந்து காட்டியபோது, அதில் எனது புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்து நான் அதிர்ந்துபோனேன். என்னுடைய தீவிர ரசிகை என்பதால் அந்த லாக்கெட்டை வைத்திருப்பதாகவும் இது தனது கணவருக்கும் தெரியும் என்றும் அந்த ரசிகை கூறினார்.
“இந்த லாக்கெட்டை அணிய என் கணவர் அனுமதித்தார். நான் இறக்கும்வரை இதை அணிந்திருப்பேன் என்று அவர் கூறியதும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
“எந்தக் கணவர்தான் தன் மனைவியின் தாலி கயிற்றில் இன்னொருவரின் புகைப் படத்தை வைத்துக்கொள்ள அனுமதி அளிப்பார். இப்படிப்பட்ட ரசிகர்களால்தான் நான் திரைத்துறையில் நிலைத்திருந்தேன். இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் இன்றுவரை அதை மறக்கவில்லை. எனது படங்களின் வெற்றிக்கு இதுபோன்ற ரசிகர்களின் பங்களிப்பு மிகுதி யாக இருந்தது,” என்று மோகன் மேலும் கூறியுள்ளார்.
‘ஹரா’ படத்தை அடுத்து சில இயக்குநர்களிடம் தனக்கேற்ற கதைகளைக் கேட்டு வருகிறாராம். மனதுக்குப் பிடித்தமான கதை அமைந்தால் உடனடியாக அதற்கான பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார் மோகன்.


