தமிழ்த் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் குறித்துதான் தற்போது அதிகம் பேசப்படுகிறது. ஏற்கெனவே ஜெயலலிதாவின் வாழ்கையை மையமாக வைத்து இணையத் தொடர்கள் உருவாகின.
அடுத்து இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில், ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். அதிலும் தனுஷ்தான் நாயகனாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பாக ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் கமல் ரசிகர்களும் இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கமலின் வாழ்க்கைக் கதையில் யார் நடிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பைக் கடந்து, அப் படத்தை யார் இயக்க வேண்டும் எனும் கேள்வி எழுந்துள்ளது.
அதற்குப் பெரும்பாலான ரசிகர்கள், கமலின் மகளான ஷ்ருதிஹாசன்தான் இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள கமல், தமது மகள் ஷ்ருதி அத்தகைய படத்தை இயக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
“என் அனுபவத்துக்கு அப்பாவை நான் இயக்குவது அவ்வளவு எளி தான விஷயம் அல்ல. அந்தப் பணியைச் செய்வதற்கு பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர்.
“அவர்களிடம் அதற்கான தகுதியும் இருக்கிறது. எனவே அப்பாவின் வாழ்க்கையை நல்ல திரைப்படமாக அவர்களால் உருவாக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“அப்பா எந்த ஒரு சிக்கலான தருணத்திலும் அமைதியாகக் காணப்படுவார். ஒரு முறை அவர் நடித்துக்கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். படப்பிடிப்பு அரங்குக்குள் நான் நுழைந்தபோது படத்தின் இயக்குநர் சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா.
“எனக்கு அதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ‘யார் இந்த ஆள் வகுப்பறையில் மாணவர்களை ஆசிரியர் நடத்துவதுபோன்று அப்பாவை வேலை வாங்குகிறாரே’ என நினைத்தேன். அதுவும், ஓர் இயக்குநராக இருப்பது நிம்மதியான வேலை என்றும் நினைத்தேன்,” என்கிறார் ஷ்ருதிஹாசன்.
திரைத்துறையில் நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தனி இசைத் தொகுப்பாளர் என்று தன் தந்தை வழியைப் பின்பற்றி பல பணிகளில் முத்திரை பதித்து வரும் ஷ்ருதி, அடுத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, கமலின் வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்கள் உள்ள காரணத்தால் அவரது வரலாற்றுப் படத்தை இரு பாகங்கள் கொண்ட படமாக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மற்றொரு தரப்போ, இணையத் தொடராக எடுத்தால்தான் கமலைப் பற்றி அனைத்து விவரங்களையும் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ள முடியும் என்கிறது.