பெண்களை அடக்கப் பார்க்கிறார்கள்: கஷ்மீரா

பெண்களை அடக்கப் பார்க்கிறார்கள்: கஷ்மீரா

3 mins read
301f307e-6222-4ae4-81ca-8a492999703a
கஷ்மீரா பர்தேஷி. - படம்: ஊடகம்

தமிழ் ரசிகர்கள் மனதில் சத்தமின்றி ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் கஷ்மீரா பர்தேஷி.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் ‘அன்பறிவு’, ‘வசந்தமுல்லை’, ‘வரலாறு முக்கியம்’, ‘பரம்பொருள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அண்மையில் வெளியீடு கண்ட ‘பிடி சார்’ படத்தில் ஆங்கில ஆசிரியையாக நடித்து இளையர்களை மேலும் கவர்ந்துள்ளார் கஷ்மீரா.

சமூக ஊடகத்தில் அதிகம் பேசப்படும் நாயகிகளில் இவரும் ஒருவர். கஷ்மீரா என்றால் அழகு என்று அர்த்தமாம். பல்வேறு மொழிகளில் நடித்தாலும் தமிழ் சினிமாதான் தனக்கென ஓர் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது என்றும் ஆண்டுக்கு இரண்டு தமிழ்ப் படங்களிலாவது நடித்து விட முடிகிறது என்றும் அண்மைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் கஷ்மீரா.

வடிவமைப்புத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், அத்துறையில் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று விரும்பினாராம். அந்த விருப்பம் நிறைவேற குடும்பத்தாரும் கைகொடுத்தனராம். எனினும் விதி தம்மை நடிகையாக்கிவிட்டது என்கிறார்.

பட்டப்படிப்பு மேற்கொண்டபோதே மாடலிங் வாய்ப்புகள் தேடிவந்தனவாம். மேலும், விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புளும் இவருக்கு கிடைத்துள்ளன.

தெலுங்கில் இவர் நடித்த முதல் படம் ‘நர்த்தனசாலா’. அடுத்து மராத்தியில் ‘ராம்பார்ட்’, இந்தியில் ‘மிஷன் மங்கல்’, கன்னடத்தில் ‘ரைடர்’ படங்களை முடித்த பிறகுதான் கோடம்பாக்கம் பக்கம் வந்து சேர்ந்தார் கஷ்மீரா.

திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் எங்கு சென்றாலும் பளபளவென காட்சியளிக்கும் கஷ்மீராவை இளையர்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை.

“சக நடிகர்கள், நடிகைகள் கூட என்னிடம் சில சமயங்களில் அழகுக் குறிப்புகள் கேட்பதுண்டு. எனக்கு என்ன பொருத்தமாக இருக்குமோ அதை மட்டுமே நான் தேர்வு செய்கிறேன்.

“திரை விழாக்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் எனக்கு பிடித்தமான வடிவமைப்பு உள்ள உடைகளை மட்டுமே அணிவேன்,” என்று சொல்லும் கஷ்மீரா, ‘வொர்த்’ என்ற பெயரில் ஆடைகளை வடிவமைத்து அவற்றை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தான் படித்த படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

“பல்வேறு மொழிகளில் நடிப்பதால் ஒரு மொழியில் மட்டுமே அதிகமாக நடிக்க முடிவதில்லை. ஆனால் இதைக் காரணமாக வைத்து எனக்குப் பட வாய்ப்புகளே இல்லை என சிலர் கதைகட்டி விடுகிறார்கள்.

“தமிழில் ஓராண்டுக்கு இரண்டு படங்கள் நடித்தால், கூடவே தெலுங்கு, கன்னடத்திலும் ஓரிறு படங்களில் நடிக்கிறேன். எனவே கிசுகிசுக்கள், வதந்திகளை பரப்புவோர் குறித்து கண்டு கொள்வதில்லை,” என்று பக்குவமாகப் பேசுகிறார் காஷ்மீரா.

அனைத்து துறைகளிலும் தற்போது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், சமூக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் பெருமளவு குறைந்துள்ளது என்கிறார்.

“உடைகளை அடிப்படையாகக் கொண்டு குணத்தை அளவிடுவது சிலருக்கு பிழைப்பாக உள்ளது. முன்பு நடிகைகள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் இயங்கும் அனைத்துப் பெண்களுமே இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இது நல்ல போக்கு அல்ல. ஆபாசமான, அவதூறான வார்த்தைகளை வைத்து பெண்களை அடக்கப் பார்க்கிறார்கள். இதுவரை என்னைப்பற்றி மோசமான விமர்சனங்கள் வெளியாகவில்லை. ஆனால் மற்ற பெண்களின் நிலையைக் கவலையுடன் எண்ணிப் பார்க்கிறேன்.

“நீ ஏன் இப்படி உடுத்துகிறாய். நீ ஏன் உடற்பயிற்சி செய்து கட்டுடலுடன் இருப்பதைப் படப்பிடிப்பு ஊடகங்களில் பகிர்கிறாய் என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். எத்தனையோ மாற்றங்கள் வந்த பிறகும் பெண்கள் உடைகளைத் தேர்வு செய்து அணிவதை ஏன் கைவிட மறுக்கிறீர்கள்,” என்று தமது ஆதங்கத்தையும் கோபத்தையும் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார் கஷ்மீரா.

தமிழ் சினிமாவில் இவருக்கு பிடித்தமான நடிகர் விஜய். அதற்காக மற்ற நாயகர்களைப் பிடிக்காது என்று அர்த்தமில்லையாம்.

“விஜய் திடீரென அரசியலுக்குப் போய்விட்டார். அவருடன் நடிக்க ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் போதும் வானத்தில் மிதப்பேன். அவரது அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில் அவர் திரை உலகை விட்டுச் செல்வது வருத்தம் அளிக்கிறது.

“நான் இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய கனவு,” என்கிறார் கஷ்மீரா பர்தேஷி.

குறிப்புச் சொற்கள்