பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படம் தமிழகத்தில் திரையிட மறைமுகமாக உதவி உள்ளார் சிவகார்த்திகேயன்.
2024ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. அஸ்வினி தத் தயாரிப்பால், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் 600 கோடி ரூபாயில் உருவாகி உள்ளது. பல ஆண்டுகளாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் பிரபாஸ் தொடர்ந்து ரூ.500 கோடி, ரூ.600 கோடி பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் அண்மையில் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஓடாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கல்கி’ திரைப்படம் இதுவரை டிக்கெட் முன்பதிவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது. ரூ.600 கோடி பட்ஜெட் பாரத்தை பிரபாஸ் தாங்குவாரா?’ என்ற கேள்விகள் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.
‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் எதிர்பார்த்ததைப்போல வெற்றி பெறவில்லை என்றால் நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாவார் என்றும் கூறுகின்றனர்.
இதுவரை வெளிநாடுகளில் பிரபாஸ் படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ள நிலையில் இந்திய மதிப்பில் சுமார் 208 கோடி ரூபாய் படம் வெளியாவதற்கு முன்பாக முன்பதிவு மூலம் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
படம் வெளியான பின்னர் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வந்தால் தான் 600 கோடி பாரத்தை பிரபாஸால் தாங்க முடியும் என்றும் தெலுங்கை தவிர மற்ற மொழிகளில் இந்தப் படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை என்ற நிலைதான் உருவாகி வருவதாக அதிர்ச்சியைக் கிளப்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்.
அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் கனவான அமரவாதி நகரை ஆந்திராவின் தலைநகராக மாற்ற வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.
அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அஸ்வினி தத் தயாரித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை அங்கு நடத்தத் திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால், படத்தின் நாயகனான பிரபாஸ், “அமராவதியில் நடத்த வேண்டாம், ஹைதராபாத்திலேயே நடத்துங்கள். அங்கு நடத்தினால் தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் வரும்,” என்று கூறிவிட்டாராம். எனவே, அமராவதியில் நடத்தவிருந்த நிகழ்ச்சியை ஹைதராபாத்திற்கு மாற்றிவிட்டார்களாம்.
இதனால் தயாரிப்பாளருக்கும் படத்தின் நாயகனுக்கும் இடையே மோதல் என்றும் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் கமல் ஹாசன் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் விநியோகம் தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் என்று கணக்கு போட்டிருந்ததாம் படத்தின் தயாரிப்பு தரப்பு. ஆனால் ‘கல்கி’ படத்தை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.
‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் கைகொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த படக்குழுவுக்கு அந்த நிறுவனமும் கையை விரித்துவிட்டதாகவும் ஒருவழியாக தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத் இந்தப் படத்தை 20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி அவரும் இந்தப் படத்தை விநியோகம் செய்ய முடியாமல் ஒருவழியாக கல்கி படத்தை வாங்கினால்தான் தான் தயாரிக்கும் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தைத் தருவேன் என்று உறுதி செய்த பிறகு கல்கி படம் நல்ல விலைக்கு விநியோகம் ஆனதாக கூறப்படுகிறது.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், “கமல் ஹாசன் நடித்தும் பெரிதாக விலை போகாத ஒரு பான் இந்தியா படம் சிவகார்த்திகேயன் படத்தை வைத்து விலை போயிருக்கிறதே. பிரபாஸுக்கு மறைமுகமாக சிவகார்த்திகேயன் உதவியிருக்கிறார்,” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.