நடிகர் விமல் நடித்திருந்த ‘விலங்கு’ என்ற இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மீண்டும் நாயகனாக நடிக்க இருக்கிறார் சூரி.
தமிழ்த் திரையில் நகைச்சுவைக் கலைஞராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் சூரி. ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் தொடங்கி ‘அண்ணாத்த’ வரை ஏராளமான படங்களில் நகைச்சுவைக் கலைஞனாக நடித்து வந்த சூரியை, தன்னுடைய ‘விடுதலை’ படம் மூலம் நாயகனாக்கி அழகு பார்த்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
‘விடுதலை’ படத்தில் தனக்குள் இருக்கும் தரமான நடிகனை வெளிக்கொண்டு வந்திருந்தார் சூரி. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சூரிக்கு தொடர்ந்து நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் அவர் நாயகனாக நடித்த ‘கருடன்’ படம் அண்மையில் வெளியாகி ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நாயகனாக நடித்து முடித்திருக்கிறார் சூரி.
அந்தப் படம் தான் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கி உள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் வெளியீட்டுக்கு முன்பே இப்படம் அனைத்துலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாரட்டுகளைப் பெற்று இருக்கிறது.
மேலும் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் சூரி. இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர உள்ளது.
இப்படி பல படங்களில் நாயகனாக வலம் வரும் சூரிக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை நடிகர் சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார். இவர் விமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விலங்கு’ என்ற இணையத் தொடரை இயக்கியதன் மூலம் பெரிதும் பேசப்பட்டார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.