உறவுகளுக்கு இடையேயான புரிதலின் அருமையை மிக விரிவாக அலசும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மிஸ் யூ’.
இப்படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்கி உள்ளதாகவும் பெரிய பிரிவுக்குப் பிறகும் மீண்டும் இணைய முடியும் என்று அடித்துச் சொல்லும் ஓர் அன்பின் கதை இது என்றும் கூறுகிறார் இயக்குநர் என்.ராஜசேகர்.
“மனிதர்களின் மகிழ்ச்சி, துயரம் ஆகியவற்றையும் நாம் உறவுகளாகத்தான் கருத வேண்டும். காதல், அன்பு என அனைத்தையும் சதுரங்க விளையாட்டுப்போல் கருதிவிடக் கூடாது. பிறகு காய் நகர்த்தல்களிலேயே நம் வாழ்க்கைக்காலம் முடிந்து விடும்,” என்று அக்கறையுடன் பேசுகிறார் ராஜசேகர்.
இவர் ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய வணிகப் படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர். தற்போது காதல் களத்தில் இறங்கியுள்ளார்.
“எனக்கு இன்னமும்கூட ஆண்-பெண் நட்பு, அன்பு, காதல், திருமணம் ஆகியவை குறித்து விரிவாகப் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் இன்னும் சொல்லி தீர்க்கவில்லை எனக் கருதுகிறேன்.
“வாழ்க்கை எல்லாருக்கும் எல்லாமும் தரக் காத்திருக்கிறது. தேடுபவர்கள் கண்டடைவார்கள் என்பதுதான் உண்மை.
“சிறு வயதில் குடும்பம், உறவுகள், நண்பர்கள், கல்லூரி என்று சிறிய வட்டத்திற்குள் மட்டுமே இருக்கிறோம். அதன் பிறகு காதல், கனவு என மற்றவை வரிசையில் வரும்.
“காதலிக்கும் வயதில் நாம் தேடிக்கொள்ளும் மகிழ்ச்சி, நம் உலகம் எல்லாமே அழகாக இருக்கும். ஆனால் காதலில் திடீர் பிரிவு ஏற்பட்டதும் வாழ்க்கை புரட்டிப்போடப்பட்டு ஒரே கணத்தில் எல்லாம் மாறிப்போகும். அதை மிகவும் அதிர்ச்சியான, நெகிழ்ச்சியான கவிதை என்பேன்,” என்று கவித்துவமாக விவரித்துக் கொண்டே போகிறார் இயக்குநர் ராஜா.
தொடர்புடைய செய்திகள்
இப்படிப்பட்ட மிகப் பெரிய பிரிவுக்குப் பிறகு பிடிக்காமல் போன பெண் மீது நாயகனுக்கு மீண்டும் காதல் ஏற்படுகிறது.
கதாநாயகனுக்கு உரிய வழக்கமான அம்சங்கள் எதுவும் தேவைப்படாது என்று படநாயகன் சித்தார்த்திடம் ஒரு முன்னுரை கொடுத்த பிறகே கதையை விவரித்தாராம் ராஜா.
எனினும் சாமானியனைப் போன்று கதாபாத்திரத்துக்குள் நுழைந்து உழைக்கும் லாவகமும் அழகான நடிப்பும் சித்தார்த்துக்கு கைவந்த கலை என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
‘சித்தா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘மிஸ் யூ’ மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார் சித்தார்த். என் மீது அக்கறை உள்ளவர்களில் சித்தார்த்தும் ஒருவர்.
“கதையைக் கேட்டதுமே சித்தார்த்துக்கு மிகவும் பிடித்துப் போனது. முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். அவர் விரும்பிய படியே படம் உருவாகியுள்ளது. எந்த ஒரு கதாபாத்திரத்துடனும் எளிதில் தன்னை பொருத்திக் கொள்பவர் சித்தார்த்.
“இயக்குநர்களைப் பொறுத்தவரை சித்தார்த் நாயகனாக அமைந்து விட்டால் பாதி சுமை குறைந்துவிடும். அதே போல் ‘மிஸ்யூ’ படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தமிழுக்குத்தான் புதியவர். அழகான கதாபாத்திரம் என்பதால் நடிக்க சம்மதித்தார்.
“இவரது இயல்பான நடிப்பு அனைத்துப் பெண்களுக்கும் பிடித்துப்போகும். சித்தார்த்துடனான காதல் காட்சிகளில் இவர் வெளிப்படுத்தி உள்ள உடல் மொழி ரசிக்கத்தக்கதாக இருக்கும். அக்கறையும் அன்பும் வெளிப்படும் இடங்களில் இருவருமே அருமையாகச் சுடர்விட்டார்கள்.
“தெலுங்கில் புதிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய வரும் ஆஷிகாவுக்கு தமிழிலும் தனி ரசிகர் கூட்டம் அமையும் என எதிர்பார்க்கலாம்,” என்கிறார் ராஜசேகர்.

