தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கோடம்பாக்கம் விவரப் புள்ளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இம்முறையும் நடிகர்கள் தங்களுடைய ஊதியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலுப்பெற்று வருகிறது. நடப்பாண்டில் தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரை கண்டுள்ளன.
எனினும் அவற்றில் நான்கு படங்கள் மட்டுமே வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன. மற்ற அனைத்து படங்களின் தயாரிப்பாளர்களும் இழப்பையே சந்தித்துள்ளனர்.
தற்போது லைக்கா உள்ளிட்ட பெரிய நிறுவனங்களே படங்களை தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக இருப்பது கதாநாயகர்களின் ஊதியம்தான்.
ஒவ்வொரு படத்துக்கும் ஐந்து கோடி, பத்து கோடி ரூபாய் என கதாநாயகர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்கள்.
முன்னணி தயாரிப்பாளர்களும் கூட இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இருந்த போதிலும் கதாநாயகர்கள் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
மிக விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இம்முறை போராட்டம் நடைபெற்றால் படப்பிடிப்பு மட்டுமின்றி பிண்ணனி குரல், இசைப்பதிவு, பட வெளியீடு என்று அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்றும் திரை உலகம் பெரும் இழப்புகளை சந்திக்கும் என்றும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
போராட்டத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.