நடிகை வேதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டனவாம். இப்போதும் கூட கைவசம் போதுமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லி மகிழ்கிறார்.
தற்போது தென்னிந்திய மொழிகளில் தலா இரண்டு படங்கள் நடித்து வருகிறாராம். மேலும், இணையத் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
“எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என சிலர் நினைக்கிறார்கள். நானும் கூட திரை உலகில் அறிமுகமான புதிதில் நடனம், பாடல், காதல் ஆகிய அம்சங்கள் உள்ள படங்களே போதும் என நினைத்திருந்தேன். ஆனால் எனக்குள் இருக்கும் நடிகையைக் கண்டுபிடித்தது இயக்குநர்கள்தான்.
“பரதேசி’, ‘காவியத்தலைவன்’, அவ்வளவு ஏன், ‘ரஸாக்கர்’ உள்ளிட்ட படங்கள் வரை இயக்குநர்கள் என்னிடமுள்ள நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர். திரையுலகில் எனக்குக் கிடைத்த ஆகப் பெரிய வெற்றி இதுதான்.
“சிலர் எண்களின் அடிப்படையில் நடிகைகளை பட்டியலிடுகிறார்கள். அது என்னவிதமான நடவடிக்கை என்பது இதுவரை புரியவில்லை. அதனால் எண் விளையாட்டில் என்னை ஈடுபடுத்த வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். சினிமா மீதான ஆசையால் நடிக்க வந்தேன். எனவே அதை சரியாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்,” என்கிறார் வேதிகா.
கொரோனா நெருக்கடி காலத்தில் மட்டுமே தம்மால் படங்களில் நடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், திரையுலகில் அறிமுகமான உடனேயே அனைத்து மொழிகளையும் கற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாராம்.
“எனக்குப் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சொந்த ஊர் மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாய் மொழி கன்னடம் என்றால், படிப்பு மொழி இந்தி என்பேன்.
“மராத்தி ஓரளவு தெரியும். தெலுங்கிலும் நன்றாக உரையாடுவேன். மலையாள மொழிதான் சற்று சிரமமானது. அனைத்து மொழிகளிலும் ஒரே விதமாகத்தான் காட்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இணையத் தொடர்களில் நடிக்கும்போது கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. தற்போது நான் நடித்த ‘யக்சினி’ இணையத்தொடர் வெளி வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இணையத் தொடர்கள் என்றால் ரசிகர்களின் வீட்டுக்குள் நுழைந்து அதை பார்க்க வைக்கலாம். கலைஞர்களுக்கும் தங்களுடைய பங்களிப்பு நேரடியாக வீடுகளை அடைவது மகிழ்ச்சி அளிக்கும். ஒரு புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர். ‘யக்சினி’ என்பது ஒரு காவல் தெய்வத்தின் பெயர். அந்நாட்களில் ‘யக்சினி’யைக் காக்கும் தேவதையாக கருதி வழிபட்டனர்.
‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா தயாரிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்றும் ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர் என்றும் சொல்லும் வேதிகா, தற்போது பிரபுதேவாவுடன் நடனத்துக்கு முக்கியத்துவம் தரும் ‘பேட்ட ரப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
“பிரபு தேவாவுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். அது இப்போது நிறைவேறி உள்ளது. அது தவிர கன்னடத்தில் ‘கானா’, தெலுங்கில் ‘பியர்’, ’ஜங்கில்’, மலையாளத்தில் ‘நாலாம்தூண்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் வேதிகா, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
நேரில் பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் இவரது இளமையின் ரகசியத்தைக் கூறும்படி தொடர்ந்து நச்சரிக்கிறார்களாம். இதில் ரகசியம் ஏதுமில்லை என்கிறார்.
“கடவுளின் ஆசியாக இருக்கக்கூடும். எந்தத் துறையாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருந்தால்தான் வெற்றி குறித்து யோசிக்க முடியும். நான் வழக்கம்போல் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடனம் என்று நேரத்தைச் செலவிடுகிறேன்.
“அதனால் துடிப்பாகச் செயல்பட முடிகிறது. எதிர்காலத் திட்டம் என்ன என்று அவ்வப்போது கேட்கிறார்கள். பெரிதாக ஒன்றுமில்லை. இன்னும் நிறைய இயக்குநர்களுடன் பயணம் செய்ய வேண்டும். குறிப்பாக மணிரத்னம், சங்கர் ஆகியோரின் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் திரை உலகில் ஏதோ சாதித்துள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படும். அந்தக் கனவு நிறைவேறும் வரை நல்ல உடல்நலத்துடன் காத்திருப்பேன்,” என்கிறார் வேதிகா.

