‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான ஐந்து பேரில், நடிகை தேவயானியின் தம்பி நகுலும் ஒருவர். அதன் பிறகு தனி நாயகனாக சில வெற்றிப் படங்களில் நடித்தார் நகுல்.
மற்ற இளம் நாயகர்களைப் போலவே இவரது திரைப்பயணத்திலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இடையில் சில காலம் நகுல் நடிப்பில் எந்தப் படமும் வெற்றிபெறவில்லை. ஒரு முறை வெற்றி அமைந்துவிட்டால் போதும், மற்ற அனைத்தையும் பிறகு பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுடன் உள்ளார் நகுல்.
அவரது நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது ‘வாஸ்கோடகாமா’ படம். மிக விரைவில் இந்தப் படம் திரைகாண உள்ளது. அதென்ன ‘வாஸ்கோடகாமா’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று கேட்டால் சிரித்தபடி விளக்கம் அளிக்கிறார் நகுல்.
“கதைப்படி, கதாநாயகனுடைய பெயர் வாசுதேவன். வில்லனுடைய பெயர் கோவர்தன். இன்னும் சில கதாபாத்திரங்களின் பெயர் சுருக்கம்தான் ‘வாஸ்கோடகாமா’ எனும் தலைப்பாக மாறி உள்ளது. நாற்காலிக்கு எப்படி நான்கு கால்கள் உள்ளனவோ, அது போன்று நான்கு கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கதை இது,” என்கிறார் நகுல்.
இது கடந்த காலத்தில் நடந்தது, எதிர்காலத்தில் நடக்கப்போவது எனக் கற்பனையை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் சொல்ல முடியுமாம்.
ஐரோப்பாவைச் சேர்ந்த வாஸ்கோடகாமா, இந்தியாவுக்கான கடல் வழியைக் கண்டுபிடித்தார் என்பது வரலாறு. அதுபோன்று இந்த படத்தின் கதைக்களம் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட புது உலகமாக இருக்கும். அப்படிப்பட்ட கதைக்கு ‘வாஸ்கோடகாமா’ என்ற தலைப்புதான் பொறுத்தமாக இருந்ததாம்.
கறுப்பு அல்லது எதிர்மறை நகைச்சுவை என்று கூறுப்படுவதை இந்தப் படத்தை திரையில் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும் என்று சொல்லும் இயக்குநர் கிருஷ்ணன், மேலும் ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறார்.
“நல்லது செய்தால் சொர்க்கத்துக்கும், கெட்டது செய்தால் நரகத்துக்கும் போவோம் என்பதுதான் நமது அடிப்படை நம்பிக்கை. என்னுடைய பார்வையில் இப்போதுள்ள உலகம்தான் சொர்க்கமாகவும், நரகமாகவும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“முன்பு இருந்த உலகத்தில் எல்லாரும் நல்லவர்களாக இருந்தார்களாம். இப்போது கலிகாலம் நடப்பதாகச் சொல்கிறார்கள். நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
“அப்படியானால் எதிர்காலத்தில் இந்த உலகம் முழுவதும் கெட்டவர்கள் மட்டுமே வாழ்ந்தால் எப்படி இருக்கும் எனும் கற்பனைதான் ‘வாஸ்கோடகாமா’.
“கெட்டவர்கள் வாழும் உலகத்தில் நல்லவன் ஒருவன் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை பாதி உண்மை, பாதி கற்பனை கலந்து சொல்லி இருக்கிறேன். அதே சமயம் நல்லவனான இப்படத்தின் கதாநாயாகன் வாழ்க்கைப் போராட்டத்தை முழுக்க முழுக்க எதிர்மறை நகைச்சுவை மூலம் சொல்லி இருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் கிருஷ்ணன்.
“கதாநாயகனை மனதில் வைத்து இந்த கதையை எழுதவில்லை. அதே சமயம் இது நாயகன் மட்டுமே நடிக்கக்கூடிய கதையும் அல்ல. எனவே அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உரிய இடமும் நடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இதை புரிந்துகொண்ட ஒரு கதைநாயகன் தேவைப்பட்டார். அதற்கு நகுல்தான் பொறுத்தமாக இருந்தார்.
“இதற்கு முன்பு ‘மாசிலாமணி’ படத்தில் நல்லவனைப் போன்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார் நகுல். இதில் நல்ல குணம் கொண்ட நாயகன் கெட்டவனைப் போல் நடிக்க வேண்டும். எனவே நகுலை தயக்கம் இன்றி ஒப்பந்தம் செய்துவிட்டோம்,” என்கிறார் கிருஷ்ணன்.
கதையைக்கேட்ட அடுத்த நிமிடமே எப்போது படப்பிடிப்பு என்று ஆர்வத்துடன் தயாராகி விட்டாராம் நகுல். அந்த நொடி முதல் படப்பிடிப்பு முடியும் வரை அவரது ஆர்வம் சிறிதளவும் குறையவில்லையாம்.
‘நகுல் அனைவரிடமும் தோழமையுடன் பழகக்கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்றும்போது ஒட்டு மொத்த அரங்கமும் உற்சாகமாக காட்சி அளிக்கும். இன்றளவும் ஒரு கல்லூரி மாணவரைப் போலத்தான் நகுல் வலம் வருவதாக குறிப்பிடும் கிருஷ்ணன், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனது அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வார் நகுல். அதன் பிறகு படப்பிடிப்பு முடியும் வரை ஒரு சிறு கேள்வியைக்கூட எழுப்பமாட்டாராம்.
உடன் நடிப்பவர்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதிலும் நகுல் அக்கறை செலுத்துவதை கண்கூடாகப் பார்த்தேன். அண்மையில் வெளியீடு கண்ட ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் உரிய காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
அதற்குப் பட நாயகன் சந்தானத்தின் நல்ல குணம்தான் காரணம்.
“மீண்டும் நல்ல கதையில் நடித்தால் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொய்வு இருக்காது. போதாத குறைக்கு கொரோனா முடக்க காலமும் திரை உலகை புரட்டிப்போட்டு விட்டது. இப்போது நான் எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு அமைந்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது,” என்கிறார் நகுல்.
இப்படத்தில் அர்த்தனா பினு நாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிக்குமார் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மேலும் ஆனந்தராஜ், முனீஸ்கான், ரெடிங் கிங்ஸ்லி, ரவி மெரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். வம்சி கிருஷ்ணா வில்லனாக மிரட்டியுள்ளார்.

