தனக்கென சில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு திரையுலகில் செயல்பட்டு வருவதாகச் சொல்கிறார் விஜய் சேதுபதி.
தனது கோட்பாடுகளை மீறும் வகையில் உள்ள கதைகளில் நடிப்பதை அறவே விரும்பவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் மனதைக் காயப்படுத்துகிற காட்சிகளில் நடிக்க இயலாது, மூட நம்பிக்கைகளை ஆதரிக்க கூடாது. பிற்போக்குத்தனமான சிந்தனை உள்ளவர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்று ஒரு பட்டியலை தயாரித்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி. தன்னைத் தேடி வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் இந்தப் பட்டியலைக் காட்ட அவர் தயங்குவதே இல்லை.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் அறிமுகமான இவர், அதற்குப் பிறகு 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியவர் இன்று இந்திய அளவில் முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளார்.
“பல்வேறு மொழிகளில் நடித்து வருவதால் அங்கு இருப்பவர்களும் என் மீது பாசம் காட்டுகிறார்கள். எனது திரைப்பயணத்தில் இது கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இனி எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றும் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் துணிச்சல் ஏற்பட்டுள்ளது.
“இத்தனை ஆண்டுகால பயணத்தில் மனதில் நல்ல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. பொறுப்பான நடிகனாக மாறிவிட்டேன். எனது திரைப்பயணத்தில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உங்களை போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று விகடன் ஊடக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி.’
ஒரு தயாரிப்பாளராக தமக்கு இதுவரை நல்ல அனுபவங்கள் கிடைத்த தில்லை என்று கூறியுள்ள அவர், படத்தயாரிப்பு முறை குறித்து தமக்கு அதிகம் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“படத்தயாரிப்பு நுணுக்கங்கள் தெரியாதது கண்டிப்பாக ஒரு குறைதான். அதனால்தான் ஒவ்வொரு முறையும் சொந்தப்படம் தயாரித்து கடனாளியாகிறேன். ஒரு கடனை அடைத்த உடனேயே அடுத்த படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொள்கிறேன். தற்போது ‘லாபம்’ படத்தால் ஏற்பட்ட கடனை அடைத்து வருகிறேன்,” என்று கூறியுள்ள அவர், அந்தக் கடன் முடிவுக்கு வந்த பிறகுதான் படத்தயாரிப்பு ஈடுபடுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய போகிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு திரைப் பிரபலமாக மக்களை, தம் ரசிகர்களை அடிக்கடி சந்திப்பதால் தனது ‘இமேஜ்’ போய்விடும் என்று நினைத்ததே கிடையாது என்கிறார் சேதுபதி.
“ஒரு சிலருடைய நடவடிக்கைகளின் காரணமாக இப்படிப் பேசப்படுகிறது. என் மீது பேரன்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சில பேர் மோசமாக நடந்து கொள்வார்கள். அதற்காக நாம் மக்களை விட்டு தள்ளிப் போய்விட முடியாது.
“இது எனக்கு மட்டுமல்ல. நடிகர் ஷாருக்கானுக்கே நடந்துள்ளது. ‘ஜவான்’ படத்தில் நடிக்கும் போது இது போன்ற பல தகவல்களை அவரும் பகிர்ந்து வந்துள்ளார்,” என்கிறார் விஜய் சேதுபதி.’
தனது மகனும் நடிகராக காலூன்றத் தொடங்கியிருப்பது இவருக்கு ஒருவித மன நிறைவை ஏற்படுத்தி உள்ளது எனலாம். ’இளங்கன்று பயம் அறியாது’ என்பதற்கு ஏற்ப தனது மகனும் அடுத்தடுத்த அடியை எடுத்து வைப்பதாகச் சொல்கிறார்.
“போதுமான அனுபவம் இல்லாததால் சிலர் சாதாரணமாக நடத்தி விடுவார்கள். ஒரு தந்தையாக அதை மட்டும் ஒழுங்குபடுத்தினால் போதும் என நினைக்கிறேன். அனுபவம் வரவர எல்லாம் சரியாகி விடும் என்று தோன்றுகிறது.
“பொதுவாக என் மகனுடன் நட்பாக பேசிப்பழகும் தந்தையாக மட்டுமே இருந்துள்ளேன். சில இடங்களில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்போது கடுமை காட்டி இருக்கிறேன்,” என்கிறார் விஜய் சேதுபதி.
ஒரு நடிகராக தமிழக, இந்திய அரசியலை கவனக்கிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் தெளிவாக பதில் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார்.
“கவனமாக இருங்கள். உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று எச்சரிக்கை கொடுப்பதுபோல் மக்கள் முடிவு அமைந்துள்ளது. இந்திய வட மாநிலங்களில் உள்ள சாமான்ய மக்கள் பேசும் காணொளிகள் பார்க்க நேர்ந்தது. அவர்கள் நல்ல அரசியல் தெளிவோடு பேசுகிறார்கள். இப்போதுதான் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் குறித்த தெளிவான புரிதல் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
“ஏதாவது சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைத்துவிட இயலாது,” என்கிறார் விஜய் சேதுபதி.

