‘பாகுபலி’ திரைப்படங்களுக்குப் பின், ‘பான்’ இந்திய நட்சத்திரமாக வளர்ந்து நின்ற நடிகர் பிரபாசுக்கு, நீண்ட நாள்களுக்குப் பிறகு, ‘கல்கி 2898 ஏடி’ மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைய பெரும் வாய்ப்புள்ளது.
நேற்று உலகமெங்கும் வெளியான இத்திரைப்படத்திற்குச் சிறப்பான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
அத்துடன், பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, பிரம்மானந்தம் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம் கொண்டுள்ள இப்படம், ரசிகர்களின் கைத்தட்டல்களையும் பெற்று வருகின்றன.
இந்து வேதங்களில் இடம்பெற்றுள்ள நான்கு யுகங்களின் இறுதி யுகமான கலியுகத்தில் அமைகிறது இத்திரைப்படம்.
எதிர்காலத்தில், 2898 ஏடி-ஆம் ஆண்டில், உலகின் முதலும் கடைசி நகரம் என்று நம்பப்படும் காசி நகரத்தில் இக்கதை நடக்கிறது.
மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமர் (அமிதாப் பச்சன்) எவ்வாறு கலியுகத்தின் இறுதியில் பிறக்கவிருக்கும், விஷ்ணுவின் பத்தாம் அவதாரமான, கல்கியின் பிறப்பை உறுதி செய்ய கல்கியின் தாய், சுமதியைப் (தீபிகா படுகோன்) பாதுகாக்கிறார் என்பதே கதையின் கருவாக அமைகிறது.
கல்கியின் பிறப்பிற்குத் தடையாக நிற்கும் கலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல் ஹாசன். எதிர்காலத்தில் அமைந்துள்ள கதை என்பதால் ‘சுப்ரீம் யாஷ்கின்’ என்ற பெயரில் அவர் தோன்றுகிறார்.
எதிர்காலத்தில் மனிதர்களின் செயல்களால் உலகம் எவ்வாறு மாறக்கூடும், சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிப்படைந்திருக்கும், போன்றவற்றை அழகாக முன்வைக்கிறது இத்திரைப்படம்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம், குழந்தைப்பிறப்பு முறை, உணவு, நீர், என்று அனைத்தும் எந்தளவிற்கு மாறியிருக்கக்கூடும் என்பதைக் கதையிலிருந்து தனித்து விளக்காமல், கதையின் ஓட்டத்துடனே படைத்திருந்தது சிறப்பாக இருந்தது.
மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பது திரையில் நன்கு புலப்படுகிறது.
கிராபிக்ஸ் போன்ற சில அம்சங்களில் ஆங்கிலத் திரைப்படங்களின் சாயல் தென்பட்டாலும், கதையும் கதைக்களமும் இந்திய புராணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதால், இந்திய ரசிகர்களுக்கு அந்நியமாக இல்லை.
இந்த கதையில் பிரபாஸின் கதாபாத்திரம் என்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு உதிக்கலாம்.
2898 ADஇல் மனிதர்கள் அனைவரும் சுயநலமாக வாழ்ந்து ‘காம்ப்ளெக்ஸ்’ என்ற உயரடுக்கு மக்கள் வாழும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு செல்ல அதிக ‘யூனிட்ஸ்’ என்ற நாணயம் தேவைப்படுவதால், அதை ஈட்ட பலரும், ‘பௌண்ட்டி ஹன்டர்ஸ்’-ஆக பணிபுரிகின்றனர். அவர்களுள் ஆகச் சிறந்தவனாக பிரபாஸின் கதாபாத்திரம் விளங்குகிறது.
கல்கியின் பிறப்பை இக்கதாபாத்திரம் எவ்வாறு பாதிக்கிறது என்பதும் திரைப்படத்தின் கருவை அமைக்கிறது.
அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். பிரபாஸ் தனது வசனங்கள், பாணி, நடிப்பு ஆகியவற்றின் மூலம், ரசிகர் களின் மனதில் நிற்கிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, என்று அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
திரையில் சிறிது நேரமேத் தோன்றினாலும், கமல் ஹாசனின் நடிப்பும் வசனங்களும் ரசிகர்களைக் கவர்கின்றன.
திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரது தோற்றம் அதிகமிருக்கும் என்று நம்பப்படுகிறது.
திஷா பட்டானி போன்ற சில நட்சத்திரங்கள் திரையில் சிறிது நேரமே வந்தாலும், வரும் நேரத்தில், சிறப்பாக நடித்துள்ளனர்.
ரசிகர்களைத் தொடர்ந்து திரைப்படத்திற்குள் ஆழ்த்த பற்பல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றங்களில் தோன்றுகின்றனர். அவர்களது காட்சிகள் ரசிக்கும்படியாக அமைகின்றன.
மூன்று மணி நேர திரைப்படம் என்றாலும் படத்தின் திரைக்கதையும் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பும் எந்த இடத்திலும் திரைப்படத்தைப் பெரிதாகத் தொய்வடையவிடவில்லை.
ஜோர்டே ஸ்டோஜில்க்கோவிச்சின் ஒளிப்பதிவு கண்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கும் விதமாகவும் இத்திரைப்படத்தின் உலகத்திற்கு ரசிகர்களை இட்டுச்செல்லும் விதமாகவும் அமைந்துள்ளது.
சந்தோஷ் நாராயணின் இசை திரைப்படத்திற்கு மிகப்பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, திரைப்படத்தின் இறுதி 20 நிமிடங்களில் அவரது இசையும் படக்காட்சிகளும் ரசிகர்களுக்குப் புல்லரிக்க வைக்கின்றன.
இத்திரைப்படம் சிங்கப்பூர் திரையரங்குகளில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.

