‘கர்ணா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்திப் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நட்சத்திர தம்பதியரான சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தற்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில், பிரபல இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில், ‘கர்ணா’ என்ற படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். அப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
மகாபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் திரைக்கதை எழுதி இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், இப்படத்தில் திரௌபதியாக நடிக்க நயன்தாராவை படக்குழுவினர் அணுகியதாக தெரிகிறது.
கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால் மொத்தம் ரூ.500 கோடி செலவில் இப்படம் பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது என இந்திய அளவில் தகவல் பரவியது.
இந்நிலையில் ‘கர்ணா’ படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் செலவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும் ‘கர்ணா’ படத்தைக் கைவிடவில்லை என இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். சில காரணங்களால் ‘கர்ணா’ தயாரிப்பை சிறிதுகாலம் தள்ளி வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“படத்தின் முதற்கட்ட பணிகள் திட்டமிட்டபடி நடந்துள்ளன. இப்படம் கைவிடப்படவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தயாரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கும்,” என்று இயக்குநர் கூறியதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்திப் படங்களில் நடிப்பதன் மூலம் இந்திய அளவில் ரசிகர்களுக்குத் தெரிந்த முகமாக மாற வேண்டும் என்பதுதான் சூர்யாவின் திட்டம். அதற்காகத்தான் தன் மனைவியுடன் சென்று மும்பையில் குடியேறினார்.
“இந்திப் படத்தில் நடித்து பிரபலமாவதன் மூலம் தமிழில் தாம் நடிக்கும் படங்களை இந்தியச் சந்தையில் எளிதில் விளம்பரப்படுத்தலாம், வெற்றி காணலாம் என்பதே அவரது நோக்கம்.
“இதனால்தான் சென்னையில் உள்ள பிரம்மாண்டமான வீட்டில் இல்லாமல் மும்பையில் வசித்து வருகிறார் சூர்யா. அதற்கான பலன் என்னவென்று ‘கர்ணா’ படம் வெளியானதும் தெரிய வரும்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

